தமிழ்நாட்டில் கன்னியாகுமரிக்கென எப்போதுமே ஒரு சிறப்புண்டு. இந்தியாவின் தென்கோடியில் இருந்தாலும், தேசிய நீரோட்டத்துடன் தன்னை இணைத்தே வைத்திருக்கும் இந்நகரம். இப்போதும் சட்டப்பேரவைகளுக்கான தேர்தலுடன் சேர்த்து, காலியாக உள்ள தங்கள் மக்களவைக்கு உறுப்பினரைத் தேர்ந்தெடுக்க உள்ளனர் குமரி வாக்காளர்கள்.
இந்த மக்களவைத் தொகுதியை இருபெரும் திராவிட கழகங்களும் கூட்டணி கட்சிகளுக்கு விட்டுக் கொடுத்துள்ளன. அதனால் கன்னியாகுமரியில் நேரடியாக களம் காணுகின்றன காங்கிரசும், பாஜகவும்.
பழைய காட்சி, புதிய கதாபாத்திரம்
கடந்த 2019 ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில்,கன்னியாகுமரியில் காங்கிரஸ் சார்பில் வசந்தகுமார் போட்டியிட்டார். இவர் தனது நாங்குநேரி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டார்.
பாஜக சார்பில் முன்னாள் மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் போட்டியிட்டார். இத்தேர்தலில் சுமார் 2.5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில், வசந்தகுமாரிடம் வெற்றியை பறிகொடுத்தார் பொன்.ராதாகிருஷ்ணன். நோயின் காரணமாக, கடந்த ஆண்டு வசந்தகுமார் காலமானதால், கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி காலியானது. இதனால், தற்போது இங்கு இடைத்தேர்தல் நடக்கிறது. கடந்த 2019 ஆண்டு காட்சியே மீண்டும் அரங்கேறுகிறது. இம்முறை காங்கிரஸின் வேட்பாளர் மறைந்த எம்பி வசந்தகுமாரின் மகன் விஜய் வசந்த்.
தந்தையின் கனவுக்காக போட்டியிடும் மகன்
தந்தை இறந்ததால் காலியான கன்னியாகுமரி மக்களைத் தொகுதியில் வசந்தகுமாரின் மகன் விஜய் வசந்தையே களம் இறக்குகிறது காங்கிரஸ் கட்சி. தந்தையின் தொழில், தமிழ் சினிமாவில் நடிகர் என இருந்த விஜய் வசந்த், இப்போது தீவிர அசரசியல்வாதி அவதாரம் காட்டுகிறார்.
அப்பாவின் தொகுதி என்றாலும், மக்களின் 'பல்ஸ்'-ஐ மிகச்சரியாகப் பிடித்து வைத்திருக்கிறார். மீனவர்கள் அதிகமுள்ள மாவட்டமான கன்னியாகுமரியில், இயற்கை பேரிடர்களின் போது மீனவர்கள் காணாமல் போவது அடிக்கடி நடக்கும் நிகழ்வு. அப்படிக் காணாமல் போனவர்களை மீட்க, 24 மணி நேரமும் இயங்கும் வகையில், ஒரு ஹெலிகாப்டருடன் கூடிய இறங்குதளம் அமைக்க வேண்டும் என்பது குமரி மீனவர்களின் நீண்ட கால கோரிக்கை.
தான் வெற்றி பெற்றால் கன்னியாகுமரியில் ஹெலிகாப்டருடன் கூடிய இறங்கு தளம் அமைப்பேன் என உறுதியளித்து கனகச்சிதமாக மீனவர்களை 'கவர்' செய்கிறார். வாழை, தென்னை, ரப்பர் ஆராய்ச்சி நிலையங்களை கன்னியாகுமரியில் அமைப்பேன் என விவசாயிகளையும், தன் பக்கம் கவர்கிறார் இந்த இளம் அரசியல்வாதி.
மாவட்டம் முழுவதும் சீரழிந்து கிடக்கும் சாலைகள் உடனடியாக சீரமைக்கப்பட வேண்டும்; நான் வெற்றி பெற்றதும் உடனடியாக சாலைகளை சீரமைக்க நடவடிக்கை எடுப்பேன்; இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்கித் தருவேன் எனக்கூறி, தொகுதியின் அத்தியாவசியத் தேவையும் தனக்குத் தெரியும் என 'ஹிட்' அடிக்கிறார் விஜய் வசந்த்.
மீண்டும் அமைச்சராக களம் காணும் பொன்னார்
கடந்த 2014 ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் 'மோடியா, லேடியா' என்ற முழக்கத்துடன் அதிமுகவைத் தனித்து களம் இறக்கினார் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா. இதனால் பிரிந்த வாக்குகளால் அந்தத் தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட்ட பொன்.ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்று, மத்திய அமைச்சராகவும் ஆனார்.
இந்த வெற்றியால் குமரிக்கு இரட்டை ரயில் பாதை, குமரி - திருவனந்தபுரம், குமரி - மதுரை நான்கு வழிசாலைகள், மார்த்தாண்டம், பார்வதிபுரம் பாலங்கள் கிடைத்தன. அமைச்சராக இருந்து அதிகம் சாதகம் இல்லை என்றாலும், பாதகமும் இல்லை என்ற அளவில் சென்று கொண்டிருந்த பொன்னாரின் மத்திய அமைச்சர் பயணத்தில் பேரிடியாக விழுந்தது பாஜகவின் கனவுத் திட்டமான சர்வதேச சரக்கு பெட்டக மாற்று முனையம்.
மீனவர்களின் மத்தியில் பதட்டத்தை ஏற்படுத்தியிருந்த இந்தத் திட்டம் தொடங்கப்படாது என உறுதி கூறப்பட்டாலும், தேர்தலுக்கு ஒரு மாதத்திற்கு முன், தனியார் திருமண மண்டபத்தில் வைத்து திட்டத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது, 2019 ஆண்டு மக்களவைத் தேர்தலில் பொன்னாரின் தோல்விக்கு வழி வகுத்தது.
கிணற்றிலிட்ட கல்லாக கிடக்கும் அந்தத் திட்டம் பற்றி பெரியதாக எந்த அறிவிப்பும் இல்லாத நிலையில், மீண்டும் இந்த இடைத்தேர்தலில் பாஜக சார்பில் களம் இறங்குகிறார் பொன்னார். இந்த முறையும், இவர் வெற்றி பெற்றால் மீண்டும் சர்வதேச சரக்கு பெட்டக மாற்று முனையம் தூசி தட்டப்படலாம் என்ற எண்ணம் மக்களிடம் இல்லாமல் இல்லை.
'மத்திய அரசிடம் அப்படி எந்தத் திட்டமும் இல்லை. தொகுதியில் நான் தொடங்கிய திட்டங்களை நான் மட்டுமே முடிக்க முடியும். மத்தியில் பாஜக ஆட்சி இருப்பதால் என்னால் அதைச் சுலபமாகச் செய்ய முடியும். புதிய திட்டங்களை கேட்டுப் பெற முடியும்' என வாக்குறுதியளித்து வாக்கு சேகரித்து வருகிறார் பொன்.ராதாகிருஷ்ணன்.
இந்த 'கான்பிடன்ட்டு'க்கு காரணம் வெற்றி பெற்றால் பொன்னாருக்கு அமைச்சர் பதவி நிச்சயம். கன்னியாகுமரி மக்கள் கடந்தத் தேர்தலில் தவறு செய்து விட்டார்கள். அதனால் இந்த முறை அவரை வெற்றி பெற வைக்க வேண்டும் என்கிறார் பாஜக நிர்வாகியான மைக்கல் பிரீதன். தமிழ்நாட்டில் தனக்குப் போட்டியோ என நினைத்த தமிழிசை சவுந்தரராஜனை தெலங்கானா ஆளுநராக அனுப்பி வைக்க முடிந்த பொன்னாரால், வானதி சீனிவாசன், எல்.முருகன் 'மூவ்' களுக்கு ஈடு கொடுக்க முடியவில்லை.
அதனால் இந்தத் இடைத்தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் அமைச்சர் பதவியை பெறுவதே பொன்னாரின் நோக்கம் என்கின்றன மத்திய பட்சி. தந்தையின் கனவுகளுக்காக களம் இறங்கும் விஜய் வசந்த், தன் முந்தைய சாதனைகளைச் சொல்லி மீண்டும் வாய்ப்பு கேட்கும் பொன்னார் என, அனுதாபத்தை நம்பி குமரிக் கடலில் மூழ்கி முத்தெடுக்க இரண்டு பேரும் முயற்சிக்கின்றனர். வெல்லப்போவது யார் என்பது தெரிய வரும் மே மாதம் வரை நாம் காத்திருக்க வேண்டும்.