தமிழ்நாட்டில் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலுடன் கன்னியாகுமரி நாடாளுமன்ற இடைத்தேர்தலும் நடைபெறுகிறது. காங்கிரஸ் கட்சி சார்பில் மறைந்த எம்.பி வசந்தகுமாரின் மகனும் நடிகருமான விஜய் வசந்த் இத்தேர்தலில் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து அதிமுக - பாஜக கூட்டணி வேட்பாளராக முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் களம் காண்கிறார்.
இந்நிலையில், நாகர்கோவில் மாநகரப் பகுதிகளில் வேட்பாளர் பொன் ராதாகிருஷ்ணன் பொதுமக்கள் மத்தியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். பார்வதிபுரம் பகுதியில் தனது பரப்புரையைத் தொடங்கிய அவர், கட்டையன்விளை,வெட்டுர்ணிமடம், வடசேரி, வேப்பமூடு என நகரின் முக்கிய வீதிகள் வழியாக தேர்தல் பரப்புரை மேற்கொண்டார்.
அப்போது பேசுகையில், "நாடாளுமன்றத் தேர்தலில் தாமரைக்கு வாக்களித்து என்னை வெற்றிபெறச் செய்தால் குமரி மாவட்டம் குட்டி சிங்கப்பூராக மாறும். கடந்த முறை மத்திய அமைச்சராக இருந்தபோது கொண்டுவந்த பல திட்டங்கள், தற்போது கிடப்பில் போடப்பட்டுள்ளன. அவற்றை மீண்டும் விரைவாக முடித்திட, எனக்கு வாக்களிக்க வேண்டும்" எனத் தெரிவித்தார்.
அப்போது, அவருடன் நாகர்கோவில் சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுக - பாஜக சார்பில் போட்டியிடும் மூத்த தலைவர் எம் ஆர் காந்தி, கூட்டணிக் கட்சித் தலைவர்கள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்
இதையும் படிங்க: கருணாநிதி பிறந்தநாளன்று ரூ.4,000 வழங்கப்படும்! - மு.க.ஸ்டாலின்