கேரள மாநிலம் எர்ணாகுளத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவர் ஒருவர் தொடுபுழையில் உள்ள கல்லூரி ஒன்றில் படித்து வருகிறார். இவர் சமீபத்தில் திருச்சூரில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க சென்ற போது காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளார். மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியபோது மீண்டும் அவருக்கு காய்ச்சல் தாக்கியதால் கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
நிபா வைரஸால் பாதிப்பட்டிருப்பது கண்டறியப்பட்டதை தொடர்ந்து அவரை தனி வார்டில் வைத்து சிகிச்சை அளித்து வருகின்றனர். மேலும், கொச்சி மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளித்த 2 செவிலியர்களும், உறவினர் ஒருவருக்கும் காய்ச்சல் அறிகுறி காணப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து அவர்கள் களமசேரி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
கேரளா முழுவதும் மொத்தம் 300 பேர் தீவிர கண்காணிப்பில் உள்ளதாக கூறப்படுகிறது. சிகிச்சையில் உள்ள மாணவர் உட்பட நான்கு பேருடைய உடல்நிலையில் முன்னேற்றம் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கேரளாவில் நிபா வைரஸ் மீண்டும் தாக்கியதை அடுத்து நிபா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு தீவிரப்படுத்தியுள்ளது.
இதுகுறித்து கன்னியாகுமரி மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குநர் டாக்டர் மதுசூதனன் கூறுகையில், "குமரி மாவட்டத்தில் நிபா வைரஸ் பரவாமல் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியரிடம் ஆலோசனை நடத்தப்பட்டது. அப்போது காய்ச்சல் பாதிப்பு பரவாமல் தடுப்பது, பாதிப்பு இருந்தால் அவற்றை எவ்வாறு கையாளுவது என்பது குறித்து கிராம சுகாதார நிலையங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டது.
குமரி மாவட்டத்தை பொறுத்தவரை மேல்புறம், முன்சிறை, திருவட்டாறு, கிள்ளியூர் ஆகிய வட்டங்களில் இருந்து பணிக்காக கேரளாவுக்கு அதிக அளவில் தொழிலாளர்கள் செல்கின்றனர். இவர்களை கண்காணிக்கும் பணியில் சுகாதார ஆய்வாளர்கள் கிராமப்புற சுகாதார செவிலியர்கள் என 300 பேர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கேரளாவில் இருந்து குமரிக்கு வரும் தொழிலாளர்களுக்கு காய்ச்சல் ஏதேனும் இருந்தால் அவர்களை பற்றிய விவரங்களை சேகரித்து தொடர்ந்து கண்காணிக்கவும் சுகாதாரத்துறை அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. குமரியை பொருத்தமட்டில் தற்போது நிபா வைரஸ் பாதிப்பு எதுவும் இல்லை" என்றார்.