கன்னியாகுமரியில் செய்தியாளர்களிடம் அர்ஜூன் சம்பத் கூறியதாவது, தமிழ்நாட்டில் உள்ள கோயில்களில் இருந்து வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்ட விலைமதிப்பற்ற சிலைகளை மீட்கும் முயற்சியில் ஐ.ஜி., பொன் மாணிக்கவேல் தலைமையிலான அதிகாரிகள் குழு நடவடிக்கை எடுத்து வருகிறது. சிலைகளை மீட்கும் இக்குழுவுக்கு மத்திய, மாநில அரசுகள் எவ்வித உதவியும் செய்யவில்லை என்ற புகார் எழுந்துள்ளது. நாடு கடத்தப்பட்ட பாரம்பரிய சிலைகளை மீட்கும் முயற்சிக்கு மத்திய, மாநில அரசுகள் முழு ஒத்துழைப்பை நல்க வேண்டும்.
இந்து மதத்தின் ஒரு அங்கமான அய்யா வைகுண்டர் ஒரு அவதாரம். அவரை ஒருசிலர் அரசியல் காரணங்களுக்காக தனி சமயமாக அறிவிக்க வேண்டுமென்று வலியுறுத்தி வருகின்றனர். இது தவறான அணுகுமுறையாகும். எம்.பி.,கனிமொழி உள்ளிட்டோர் இலங்கை முஸ்லீம் காங்கிரஸ் எம்.பி., இல்லத் திருமண விழாவில் பங்கேற்றதோடு, முக்கியமான சிலரையும் சந்தித்து பேசியுள்ளார். திமுகவுக்கும், இலங்கை முஸ்லீம் காங்கிரசுக்கும் என்ன தொடர்பு உள்ளது. இதனால் கனிமொழியின் இலங்கை பயணத்தை என்ஐஏ விசாரிக்க வேண்டும்.
நடிகர் ரஜினிகாந்த், தனிக்கட்சி தொடங்கி வரும் சட்டசபைத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் போட்டியிடுவார். அதுமட்டுமல்லாமல் அரசியலில் ஒரு மாற்றத்தையும் ஏற்படுத்துவார். ஆனால், அவர் பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவராக பதவியேற்பார் என்பது போன்ற தகவல் தவறானதாகும் என்றார்.