கன்னியாகுமரி: திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் கீழ் கன்னியாகுமரி மாவட்டம் இருந்தபோது, அதன் தலைநகராக தக்கலை அருகே உள்ள பத்மநாபபுரம் இருந்து வந்தது. இங்கு மன்னர்கள் காலத்தில் ஆண்டுதோறும் நவராத்திரி விழா மிக கோலாகலமாக கொண்டாடப்பட்டு வந்தது. பின்னர், குமரி மாவட்டம் தமிழ்நாட்டுடன் இணைந்த பின்பு நிர்வாக வசதிக்காக இதன் தலைநகர் திருவனந்தபுரத்திற்கு மாற்றப்பட்டது.
அதன் பின்பு, நவராத்திரி விழா திருவனந்தபுரத்தில் ஆண்டுதோறும் பத்து நாட்கள் நடைபெற்று வருகிறது. தலைநகரை திருவனந்தபுரத்திற்கு மன்னர் மாற்றிய பின்பும், பத்மநாபபுரம் அரண்மனையில் இருந்து வருடம்தோறும் நவராத்திரி விழா துவங்கும் முன்பாக, குமரி மாவட்டம் பத்மநாபபுரம் அரண்மனையில் உள்ள தேவார கட்டு சரஸ்வதி அம்மன், குமாரகோவில் வேளிமலை முருகன், சுசீந்திரம் முன்னு தித்த நங்கை அம்மன் ஊர்வலமாக திருவனந்தபுரம் எடுத்துச் செல்லப்படும்.
ஆண்டுதோறும் நடைபெறும் இந்த விழாவில் பங்கேற்பதற்காக 3 சாமிகளும் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு, நவராத்திரி தொடக்க நாளில் இருந்து விழா முடியும் வரை திருவனந்தபுரத்தில் வைத்து வழிபாடு செய்யப்படும். அதன் பிறகு, 3 சாமிகளும் அங்கிருந்து புறப்பட்டு, குமரி மாவட்டம் வந்து சேரும். சுவாமிகள் புறப்படுதல் மற்றும் வருகையின்போது ஏராளமான பக்தர்கள் திரண்டு வரவேற்று வழிபடுவர்.
இந்த ஆண்டு நவராத்திரி விழாவில் பங்கேற்பதற்காக சுசீந்திரத்தில் இருந்து முன்னு தித்த நங்கை அம்மன் புறப்பட்டது. தமிழ்நாடு - கேரளா போலீசார் அணிவகுப்பு மரியாதையுடன் புறப்பட்ட முன்னு தித்த நங்கை அம்மனுக்கு வீதிகள் தோறும் பக்தர்கள் திரண்டு பரவசத்துடன் மேளதாளம் முழங்க வரவேற்பு அளித்தனர். இதனைத் தொடர்ந்து முன்னு தித்த நங்கை அம்மன் மற்றும் வேளிமலை முருகனும் பக்தர்கள் புடை சூழ, பத்மநாபபுரம் அரண்மனையை வந்தடைந்தது.
இதனைத் தொடர்ந்து நேற்று அரண்மனை உப்பரிகை மாளிகையின் மேல் மாடியில் உள்ள பூஜை அறையில் மிக பாதுகாப்பாக வைக்கப்பட்டிருக்கும் உடைவாளை ஊர்வலமாக எடுத்துச் செல்லும் நிகழ்ச்சி தொடங்கியது. உடைவாளை அரண்மனை கண்காணிப்பாளர் எடுத்து, தொல்பொருள் துறை இயக்குனர் தினேஷிடம் ஒப்படைத்தார். அதனை அவர் கேரள தேவசம்போர்டு மந்திரி ராதா கிருஷ்ணனிடம் வழங்கினார். அவரிடம் இருந்து உடைவாளை, குமரி மாவட்ட தேவசம் போர்டு இணை ஆணையாளர் ரத்தினவேல் பாண்டியன் பெற்றுக் கொண்டார்.
3வது நாளாக நேற்று காலை விளக்கு கட்டு, தெய்யம், பஞ்சவாத்தியம் உள்ளிட்ட கேரள கலாச்சார நிகழ்ச்சிகளுடன் ஊர்வலமாக புறப்பட்ட சாமி சிலைகளுக்கு, தமிழ்நாடு - கேரள எல்லையான களியக்காவிளை பகுதியில் இரு மாநிலத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் வரவேற்பளித்தனர். இதனையடுத்து தமிழ்நாடு - கேரள எல்லையில் கேரள மாநில காவல்துறை அணிவகுப்பு மரியாதையுடன் கேரள அரசிடம் சாமி சிலைகள் ஒப்படைக்கப்பட்டது.
சாமி சிலைகள் நேற்று மாலை கேரள மாநிலம் நெய்யாற்றின்கரை கிருஷ்ணன் கோவிலைச் சென்றடைந்தது. தொடர்ந்து, இன்று காலையில் அங்கிருந்து புறப்பட்டு இரவு திருவனந்தபுரத்திற்கு சென்றடைகிறது. இதையடுத்து, இன்று (அக்.14) காலையில் நெய்யாற்றின் கரையிலிருந்து சாமி சிலைகள் புறப்பட்டு, அன்று இரவு திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோயிலைச் சென்றடையும்.
இதனைத் தொடர்ந்து நவராத்திரி கொலு மண்டபத்தில் 10 நாட்கள் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறும். இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு மீண்டும் சாமி சிலைகள் ஊர்வலமாக குமரி மாவட்டம் கொண்டு வரப்பட்டு அந்தந்த கோயில்களில் ஒப்படைக்கப்படும்.
இதையும் படிங்க: நாகர்கோவில் தலைமை தபால் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் கைது!