கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஆறு சட்டப்பேரவைத் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில், ஒரு தொகுதிக்கு மூன்று பறக்கும் படைகள் வீதம் ஆறு தொகுதிகளிலும் 18 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு தீவிர சோதனையில் ஈடுபட்டுவருகின்றனர்.
இந்நிலையில் இன்று காலை நாகர்கோவில் அருகே தேரேகால்புதூரில் தேசிய நெடுஞ்சாலையில் தேர்தல் பறக்கும் படை வட்டாட்சியர் சரஸ்வதி தலைமையிலான குழுவினர் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது அந்த வழியாக வந்த தனியார் பேருந்தில் சோதனை செய்தபோது, ராமநாதபுரத்தை சேர்ந்த முகமது கபிலுதீன் என்பவரிடமிருந்து 34 லட்சத்துத்து எட்டாயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.
அவரிடம் உரிய ஆவணங்கள் இல்லாததால் அந்தப் பணத்தைத் தேர்தல் பறக்கும் படையினர் கைப்பற்றினர். அவரிடம் நடத்திய விசாரணையில் நாகர்கோவில், குளச்சலில் இந்தப் பணத்தை கொடுக்க வந்ததாகத் தெரிவித்தார்.
இதனைத்தொடர்ந்து நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள அகஸ்தீஸ்வரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் ஒப்படைத்தனர். மேலும் இந்த பணம் ஹவாலா பணமா என்ற ரீதியில் அலுவலர்கள் விசாரணை நடத்திவருகின்றனர்.