கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை சோதனைச்சாவடியில் ஜனவரி 8ஆம் தேதி இரவு பணியிலிருந்த மார்த்தாண்டத்தைச் சேர்ந்த காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன் துப்பாக்கியால் சுடப்பட்டும், கத்தியால் குத்தப்பட்டும் படுகொலை செய்யப்பட்டார். சம்பவம் நடந்த தினத்தன்று இரவு, கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் காவலர்கள் தீவிர தேடுதல் வேட்டை நடத்தியும் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க முடியவில்லை.
இந்நிலையில், களியக்காவிளை பகுதி வழியாக இரண்டுபேர் தப்பி ஓடும் சிசிடிவி காட்சிகள் கிடைத்தன. அந்த பதிவுகளை வைத்து, குற்றவாளிகள் தெளஃபீக், அப்துல் சமீம் ஆகியோர் கொலை செய்ததாகத் தகவல் வெளியிடப்பட்டது. குற்றவாளிகள் இருவரும் கர்நாடக மாநிலம் உடுப்பியில் பதுங்கியிருப்பதாகக் காவலர்களுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதனடிப்படையில், உடுப்பி ரயில் நிலையத்தில் ஜன.14ஆம் தேதி தவுபீக்(28), அப்துல் சமீம்(32) ஆகியோரை தமிழ்நாடு-கேரள காவலர்கள் கைது செய்தனர். இதன் பின்னர் குற்றவாளிகள் இருவரையும் கொலை நடந்த இடத்தில் வைத்து விசாரணை நடத்த முடிவு செய்து, இரண்டு குற்றவாளிகளும் கர்நாடகாவிலிருந்து குமரி மாவட்டத்திற்கு இன்று அதிகாலை அழைத்து வரப்பட்டனர்.
குற்றவாளிகள் இருவரும் காலை 10 மணிக்கு குழித்துறை நீதிமன்றத்தில் நீதிபதி முன்பு ஆஜர் படுத்தப்படவுள்ளனர் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், இன்று காலை இரண்டு குற்றவாளிகளையும் கொலைச் சம்பவம் நடந்த களியக்காவிளைக்கு அழைத்துச்சென்று விசாரணை நடத்தினர்.
அப்துல் சமீம், தவ்பீக் ஆகியோரிடம் காவல்துறையினர் நடத்திய விசாரணையில், பல அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதில், "இந்தியாவை இஸ்லாமிய நாடாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறோம். அரசை எதிர்த்து நாங்கள் நடத்தும் யுத்தத்தை, காவல்துறையினர் எளிதாக தகர்த்து வருகின்றனர். இதனால், தமிழ்நாடு மற்றும் கேரளாவில் பதற்றமான சூழலை உருவாக்க தொடர் முயற்சிகள் மேற்கொண்டும் பலனளிக்கவில்லை. எங்களுடன் தொடர்பில் உள்ள அமைப்பைச் சேர்ந்தவர்கள் தொடர்ச்சியாக கைது செய்யப்பட்டு வந்தனர்.
இதனால், அரசுக்கும், காவல்துறைக்கும் எச்சரிக்கை விடுக்கும் வகையில் சோதனை சாவடியில் இருந்த எஸ்.ஐ. வில்சனை சுட்டு கொன்றோம்" என முதல் கட்ட விசாரணையில் குற்றவாளிகள் வாக்குமூலம் அளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இவர்கள் இருவரும், ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்ததும், 'அல் ஹண்ட்' என்ற அமைப்பை தமிழகம், கேரளா, கர்நாடகா உட்பட தென் மாநிலங்களில் உருவாக்கி அதன் மூலம் பயிற்சி பெற்றதும், இந்த அமைப்பில் இருந்த பலர் இவர்களுடன் சேர்ந்து தற்கொலை படை தாக்குதல் நடத்துவதற்காக மனித வெடிகுண்டாக பயிற்சி எடுத்துள்ளது தெரியவந்துள்ளது.