கன்னியாகுமரி மாவட்டம், மார்த்தாண்டம் அருகே உள்ள பள்ளியாடி பகுதியில் பள்ளியப்பன் எனும் உருவமில்லாத கடவுள் பள்ளி அமைந்துள்ளது. இத்தலம் மும்மத மக்களும் வணங்கும் புனித தலமாகும்.
இந்துக்கள் திருவிளக்கேற்றியும், கிறிஸ்தவர்கள் மெழுகுவர்த்தி ஏற்றியும், முஸ்லீம்கள் சாம்பிராணி பத்தி ஏற்றியும் வணங்குவது வழக்கம். இங்கு ஆண்டுக்கொரு முறை மும்மத மக்களும் இணைந்து சர்வமத பிரார்த்தனை, சமபந்தி விருந்து போன்ற நிகழ்ச்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
வழக்கமான விழாக்கள் போல அல்லாமல் இங்கு மும்மத மக்களும் காணிக்கையாக வழங்கிய அரிசி, காய்கறி போன்றவற்றால் சமபந்தி விருந்து பரிமாறப்பட்டு வருவது வழக்கம். இந்த ஆண்டு சர்வமத பிரார்த்தனை மற்றும் சமபந்தி விருந்து இன்று நடைபெற்றது. இதற்காக பள்ளியாடி வட்டார கிராமங்களை சேர்ந்தோர் குடும்பம் குடும்பமாகவும், சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை ஒற்றுமையுடன் தங்கள் சக்திக்கேற்ற பணிகளை செய்தனர்.
மத ஒற்றுமையை பறைசாற்றும் இந்நிகழ்ச்சி பன்னெடுங்காலமாக நடைபெற்று வருவது வரலாற்றில் மறைக்க முடியாத நிகழ்வாக விளங்குகிறது. இந்நிகழ்வில் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் கேரளாவில் இருந்தும் ஒரு லட்சத்துக்கும் மேலான மக்கள் சமப்பந்தி விருந்தில் கலந்து கொள்வார் என நிர்வாகிகள் தரப்பில் கூறினார்.