கன்னியாகுமரி மாவட்டத்தில் நாளுக்கு நாள் கரோனா தொற்று பாதிப்பு அதிகரித்துவருகிறது. தற்போதைய நிலவரப்படி நான்காயிரத்திற்கும் அதிகமானவர்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், பொதுமக்கள் அதிகம் வந்து செல்லும் அரசு அலுவலகங்களில் பல கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுவருகின்றன. இதன் ஒரு பகுதியாக பொதுமக்கள், வாகன ஓட்டிகள், மோட்டார் தொழில் சார்ந்தவர்கள் அதிகளவில் வந்து செல்லும் இடமான வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
அதன்படி கனரக வாகனங்களுக்கான புதிய ஓட்டுநர் உரிமம், ஓட்டுநர் உரிமம் புதுப்பித்தல், எஃப்சி ஆகியவை நிறுத்தப்பட்டுள்ளதாகவும், இருசக்கர வாகனங்களுக்கு தினசரி தலா 30 பேர்களுக்கு மட்டுமே ஓட்டுநர் உரிமம், ஓட்டுநர் உரிமம் புதுப்பித்தல் செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இரவு நேரம் ஆன்லைன் மூலமாக நேரம் ஒதுக்கீடு செய்யப்பட்டு, அதனடிப்படையில் மட்டுமே பணி நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குமரி மாவட்டத்தைச் சேர்ந்த கனரக மற்றும் இலகு ரக வாகன ஓட்டுநர்கள், வாடகை கார் ஓட்டுநர்கள், இருசக்கர வாகன ஓட்டிகள், ஓட்டுநர் பயிற்சி பள்ளி உரிமையாளர்கள் ஆகியோரிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த அறிவிப்பால் தினசரி பல்லாயிரக்கனக்கான புதிய விண்ணப்ப மனுக்கள் தேக்கம் அடைவதோடு நடைமுறைச் சிக்கல் ஏற்படும் நிலை உருவாகலாம் என்றும், ஆகவே இதனை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் வாகன ஓட்டிகளும், மோட்டார் வாகனங்களைச் சார்ந்து தொழில் செய்து வருபவர்களும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: புதிய கல்விக் கொள்கை : கார்ப்பரேட் கொத்தடிமைத்தனத்தை வளர்க்க மட்டுமே உதவும் - வேல்முருகன் தாக்கு!