கறுப்பர் கூட்டம் யூ-ட்யூப் சேனல் கந்த சஷ்டி கவசம் குறித்து சர்ச்சைக்குரிய காணொலியை வெளியிட்டது. இதைத்தொடர்ந்து தமிழ்நாடு, புதுச்சேரியில் எம்.ஜி.ஆர், பெரியார், அண்ணா சிலைக்கு சிலர் காவி சாயம் பூசினர். இதற்குப் பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்தனர்.
இந்நிலையில் இன்று (ஜூலை 30) அதிகாலை கன்னியாகுமரி மாவட்டம், குழித்துறை முக்கிய சந்திப்பில் உள்ள அண்ணா சிலை பீடத்தில் காவித்துண்டு கட்டி, உபயோகமற்ற பொருட்கள் வீசப்பட்டிருந்தது. இதை காவல் துறையினர் அகற்றினர்.
இந்நிகழ்விற்கு தமிழ்நாடு முழுவதும் எதிர்ப்புக் கிளம்பியது. இந்த சம்பவத்தில் சம்பந்தப்பட்ட நபர்களை கைது செய்ய பல கட்சித் தலைவர்கள் கோரிக்கை விடுத்தனர். மேலும் திமுக சார்பில் சட்டமன்ற உறுப்பினர் மனோதங்கராஜ் களியக்காவிளை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இந்நிலையில் காவல் துறையினர் நடத்திய விசாரணையில், அந்தப் பகுதியில் சுற்றித் திரியும் தங்கராஜ் என்ற மனநோயாளி, அண்ணா சிலையில் காவித் துண்டை வைத்தது காணொலி மூலம் தெரிய வந்தது.
மனநலம் பாதிக்கப்பட்ட தங்கராஜ், வழியில் கிடைக்கும் ஆடை உள்ளிட்டப் பொருட்களை சந்திப்புப் பகுதிகளில் தோரணம் போல தொங்க விடுவது அவரது வாடிக்கை ஆகி இருந்தது தெரிய வந்துள்ளது.
இதையும் படிங்க...அண்ணா சிலை மீது காவித் துணி போர்த்தியதால் பரபரப்பு!