கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே அமைந்துள்ள ஜெயசேகரன் மருத்துவமனை வளாகத்தில் செயல்பட்டு வரும் மருத்துவ கல்லூரியில் திருவண்ணாமலை மாவட்டம் ஓசூர் இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்த லோகேந்திரன் என்பவரது மகள் தனுஷியா (19), முதலாம் ஆண்டு கதிர்வீச்சியியல் மருத்துவ தொழில்நுட்ப பிரிவில் படித்து வந்துள்ளார். அவர் விடுமுறைக்கு வீட்டிற்குச் சென்றுவிட்டு இன்று காலை விடுதிக்கு திரும்பியிருக்கிறார்.
இந்நிலையில், மதியவேளை நெடுநேரமாகியும் தனுஷியாவின் அறைக் கதவு திறக்கப்படாததால் சந்தேகமடைந்த மாணவிகள் ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்துள்ளனர். அப்போது தனுஷியா தன் துப்பட்டாவில் தூக்கிட்டு தொங்கியது தெரியவந்தது.
இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த விடுதி மாணவிகள், மருத்துவமனை நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்தனர். தனுஷியாவின் அறையை மாற்று சாவி கொண்டு திறந்து சடலைத்தை மீட்ட மருத்துவமனை நிர்வாகத்தினர், இச்சம்பவம் குறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் தனுஷியாவின் செல்போன் உள்ளிட்ட உடைமைகளைக் கைபற்றி தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
இதனையடுத்து தனுஷியாவின் மரணம் குறித்து தகவல் அறிந்து மருத்துவக் கல்லூரி விடுதி அலுவலகத்தை முற்றுகையிட்ட அவரது குடும்பத்தினர், இந்த மரணம் குறித்து விடுதி ஊழியர்களிடம் கேள்வியெழுப்பினர்.
அப்போது கல்லூரி விடுதி ஊழியர்கள் தனுஷியா பற்றி முன்னுக்குப் பின் முரணான தகவல்களை தெரிவித்ததால், தனுஷியாவின் உறவினருக்கும் கல்லூரி விடுதி ஊழியர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
மருத்துவ மாணவர்கள் படிப்பு சுமையினால் தற்கொலை செய்து வரும் நிலையில், வீட்டிற்கு விடுமுறைக்குச் சென்று திரும்பிய மாணவி தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.