கன்னியாகுமரி: நாகர்கோவில் அருகே வாகன நெருக்கடி மிகுந்த சாலையோரம் உள்ள டீக்கடை ஒன்றில் இளைஞர் ஒருவர் தடியால் பொருட்களை அடித்து உடைக்கும் சிசிடிவி காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.
கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலையில், சுங்கான் கடை அருகே தனியார் டீக்கடை ஒன்று உள்ளது. எப்போதும் வாகன நெருக்கடி மிகுந்த சாலையோரம் ஏராளமான கடைகள் இயங்கி வருகின்றன. இதில் ஒரு கடையில் இளைஞர் ஒருவர் கையில் தடியுடன் புகுந்து பொருட்களை அடித்து உடைக்கும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
இது குறித்து கடையின் உரிமையாளர் ஆண்டனி ஜெரோ நாகர்கோவில் நேசமணி நகர் போலீஸ் நிலையத்தில் ஒரு புகாரும், இரணியல் காவல் நிலையத்தில் ஒரு புகாரும் அளித்துள்ளார். அந்த புகாரில் தங்கள் கடைக்கு சதீஷ் பிரபு உட்பட ஒன்பது பேர் வந்து ஸ்நாக்ஸ் உண்டுவிட்டு, அதற்குப் பணம் கேட்டபோது தகராறு செய்ததாக கூறப்படுகிறது.
அவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் புகாரில் குறிப்பிட்டுள்ளார். வழக்குப் பதிவு செய்த ரணியல் போலீசார் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தச் சம்பவம் இப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: மெர்க்கன்டைல் வங்கி செயல்பட எவ்வித சிக்கலும் இல்லை: தேசியப் பங்குச் சந்தைக்கு நிர்வாகம் கடிதம்!
அதைப்போல கன்னியாகுமரி மாவட்டத்தில் வன்முறை செயல்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. கடந்த மார்ச் மாதம் கேலி, கிண்டல் செய்த நபர்களை தட்டி கேட்ட பெண்ணை மின் கம்பத்தில் கட்டி வைத்து துன்புறுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அதனைத் தொடர்ந்து பொது இடத்தில் வரும் பெண்கள் மீது தாக்குதல்கள் தொடர்ந்து வருகிறது. இந்தச் சம்பவங்கள் காரணமாக பட்டப்பகலிலும் பெண்கள் சாலையில் நடமாட முடியாத ஒரு அவல நிலைக்குத் தள்ளப்பட்டு உள்ளனர். தற்பொழுது ரவுடிகளின் அட்டகாசமும் அதிகரித்து வருகிறது. மீண்டும் குமரியில் அரிவாள், கத்தி கலாசாரம் தற்போது தலைதூக்கி உள்ளது. இதன் தொடர்ச்சியாக தனியார் டீக்கடையை தடியுடன் புகுந்து பொருட்களை அடித்து உடைக்கும் வீடியோ காட்சிகள் அச்சத்தை ஏற்ப்படுத்தியுள்ளன.
குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக நடந்து வரும் குற்றச்சம்பவங்கள் குறித்து காவல் துறையினர் கடுமையான தண்டனை விதிக்காததே, இது போன்ற செயல்கள் அதிகரித்து வருவதற்குக் காரணம் எனவும்; மேலும், போலீசார் கண்காணிப்புப் பணிகளை துரிதப்படுத்த வேண்டும் என்றும்; ரவுடிகளுக்கு கடுமையான தண்டடைகள் வழங்க வேண்டும் எனவும் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், டீக்கடையில் நொறுக்குத்தீனி உண்டுவிட்டு, அதற்குப் பணம் கேட்ட கடை உரிமையாளரை தடியைக் கொண்டு சிலர் தாக்க முயன்ற சம்பவம் காணொலியாக சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி அதிர்ச்சியையும் , பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது. இரணியல் மற்றும் நேசமணிநகர் போலீசார் இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து தலைமறைவான நபரைத் தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: கேலி, கிண்டலை தட்டிக் கேட்ட பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை... வட மாநிலங்களை மிஞ்சிய கொடூரம்!