கன்னியாகுமரி பூம்புகார் படகு போக்குவரத்து கழகம் அருகே வாவத்துறை உள்ளது. இங்கு தூய ஆரோக்கிய நாதர் ஆலய பங்கைச் சேர்ந்த மீனவ மக்கள் வசித்து வருகின்றனர். இந்தப் பங்கு பேரவையின் பங்குத் தந்தை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், ”குமரி மாவட்ட மீன்வளத்துறை சார்பில் கரோனா ஊரடங்கின்போது மீன்பிடிக்க மீனவர்களுக்கு 13 நிபந்தனைகள் விதிக்கப்பட்டன.
நிபந்தனை 4இன் படி கடலில் இருந்து பிடித்துவருகின்ற மீன்களை அந்தந்த மீனவ கிராமங்களில் மட்டுமே விற்பனை செய்ய வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த விதிமுறைகளை மீறி, கடந்த மே 24ஆம் தேதி கன்னியாகுமரியைச் சேர்ந்த ஏராளமான மீனவர்கள் வாவத்துறை மீன் மார்க்கெட்டில் வந்து அத்துமீறி மீன்களை விற்றனர்.
இதனால் அதிகப்படியான கூட்டம் இருந்தது. இதனால் கரோனா பரவும் என்ற அச்சத்தால் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வாவத்துறை மீனவர்கள் அன்று முதல் மீன்பிடிக்கச் செல்லாமல் உள்ளனர். இதன் காரணமாக வாவத்துறை மீனவர்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த விவகாரத்தால் இரண்டு ஊருக்கும் இடையே சட்டம் - ஒழுங்கு பிரச்னை உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே மாவட்ட ஆட்சியர், மீன்வளத்துறை இதுதொடர்பாக உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.
இதையும் படிங்க:வறுமையில் வாடும் 3500 மீனவக் குடும்பங்கள் - கண்டுகொள்ளுமா அரசு5?