கரோனா வழக்குகளை முடித்து வைக்கக்கோரி, கன்னியாகுமரி மாவட்டம் தேங்காய்ப்பட்டணம், முள்ளூர்துறை தூய லாறன்ஸ் திருச்சபை பங்குப்பேரவை சார்பாக மாவட்ட ஆட்சியரிடம் மனு ஒன்று கொடுக்கப்பட்டுள்ளது.
அதில், “2020 ஏப்ரல் 25ஆம் தேதி குளச்சல் தனிப்படைப் பிரிவு காவலர்கள், எங்கள் ஊர் முள்ளூர்துறையில் கரோனா ஊரடங்கு ரோந்துப் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அப்போது அங்கிருந்த இளைஞர்களுக்கும், காவல் துறையினருக்கு வாக்குவாதம் ஏற்பட்டது.
அப்போது, துரதிருஷ்டவசமாக காவல் துறை ரோந்து வாகனத்தை கல் எரிந்து தாக்குமளவிற்கு இந்தச் சம்பவம் சென்றது. அதனைத் தொடர்ந்து 30-க்கும் அதிகமான ஆண்கள், பெண்கள் மீது முதல் தகவல் அறிக்கை புதுக்கடை காவல் நிலையத்தில் பதிவுசெய்யப்பட்டது. அதன் பின்னர் சில இளைஞர்களின் பெயர்களும், தகவல் அறிக்கையில் இணைத்துக்கொள்ளப்பட்டது.
பொதுமக்களின் நலனுக்காக அரசு விதிக்கும் எந்த ஒரு சட்டத்தையும், காவல் துறை நடைமுறைப்படுத்தும்போது, அதற்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டியது எங்கள் ஒவ்வொருவரின் கடமையாகும்.
பொதுவாகவே எங்கள் ஊரில் எவ்வித சண்டைகளோ, இதுபோன்ற நிகழ்வுகளோ இதற்கு முன்னர் நடந்தது இல்லை. இந்த நிகழ்வும் திட்டமிட்டோ, இல்லை தாக்குதல் நடத்த வேண்டுமென்ற எண்ணத்திலோ நடந்தது இல்லை. எதிர்பாராமல் நடந்தேறிய இந்த நிகழ்விற்கான தண்டனையை ஒவ்வொரு நாளும் அதில் ஈடுபட்ட இளைஞர்கள் அனுபவித்துக் கொண்டிருக்கின்றனர்.
குறிப்பாக முதல் தகவல் அறிக்கையில் பெயர் இடம்பெற்ற இளைஞர்கள், பிழைப்பிற்காக வெளிநாட்டிற்கு வேலை தேடிச் செல்ல கடவுச்சீட்டு எடுக்க முடியாமல் மிகவும் சிரமப்படுகின்றனர்.
ஆகவே தாங்கள் தயை கூர்ந்து கரோனா ஊரடங்கு காலத்தில் நடந்த இந்த வழக்கை முடித்து தருமாறும் நடந்த நிகழ்விற்காக ஊர் மக்கள் அனைவரும் நிபந்தனையற்ற மன்னிப்பு கோருவதுடன், இதுபோன்ற நிகழ்வு வருங்காலங்களில் நடைபெறாது என்பதையும் முள்ளூர்துறை ஊர் மக்கள் சார்பாக உறுதி அளிக்கிறோம்" எனக் கூறியுள்ளனர்.
இதையும் படிங்க...'மகாராஷ்டிரா, கேரளாவிலிருந்து வந்தால் 14 நாள்கள் தனிமைப்படுத்துதல் கட்டாயம்'