கன்னியாகுமரி: தூத்துக்குடியைச் சேர்ந்தவர் 27 வயது இளம்பெண். இவர் கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் முதுகலை மயக்கவியல் மருத்துவம் 2ஆம் ஆண்டு, கல்லூரி விடுதியில் தங்கி படித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த அக்டோபர் 6ஆம் தேதி அம்மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து குலசேகரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும், மாணவி எழுதி வைத்திருந்த கடிதத்தையும் கைப்பற்றினர்.
அந்த கடிதத்தில் கல்லூரி பேராசிரியர் பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்ததாகவும், சீனியர் மாணவர் ஒருவரும், மாணவி ஒருவரும் மனதளவில் டார்ச்சர் செய்ததாகவும் குறிப்பிட்டு இருந்தார். இதனையடுத்து, குற்றம் சுமத்தப்பட்ட 3 பேர் மீது போலீசார் தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குப் பதிவு செய்தனர்.
அதைத் தொடர்ந்து கடந்த அக்டோபர் 13ஆம் தேதி பேராசிரியரை கைது செய்த போலீசார், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். தற்போது இந்த வழக்கு சிபிசிஐடி போலீசாருக்கு மாற்றப்பட்டுள்ளது. இதையடுத்து சிபிசிஐடி டிஎஸ்பி ராஜ்குமார், இன்ஸ்பெக்டர் பார்வதி தலைமையிலான போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
மேலும் கல்லூரிக்குச் சென்று மாணவி தங்கி இருந்த அறையிலும் ஆய்வு மேற்கொண்டனர். தற்கொலை செய்து
கொண்ட மாணவியின் லேப்டாப், செல்போன் ஆகியவற்றை கைப்பற்றி விசாரணை நடத்தப்பட்டது. தொடர்ந்து கல்லூரி பேராசிரியர்கள் சிலரிடமும், தற்கொலை செய்து கொண்ட மாணவியின் பெற்றோரிடமும் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
கடந்த 2 நாட்களாக போலீசார் கல்லூரியில் முகாமிட்டு மாணவ - மாணவிகளிடம் தனித் தனியாக விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில், தலைமறைவாகி உள்ள மாணவர்கள் இருவரை பிடிக்க போலீசார் நடவடிக்கை மேற்கொண்டனர். அப்போது மாணவர் மதுரை ஐகோட்டில் முன்ஜாமீன் பெற்று உள்ளது தெரிய வந்ததைத் தொடர்ந்து, போலீசார் தேடி வந்த மாணவியும் முன்ஜாமீன் கேட்டு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இது தொடர்பான வழக்கு நேற்று முன்தினம் (அக்.17) விசாரணைக்கு வந்தது. இதையடுத்து இன்ஸ்பெக்டர் பார்வதி தலைமையிலான போலீசார் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் ஆஜராகினர். இதனைத் தொடர்ந்து தற்கொலைக்கு தூண்டியதாக மாணவி மீது ஆதாரங்கள் எதுவும் இல்லை. எனவே, மருத்துவ மேற்படிப்பு மாணவிக்கு முன்ஜாமீன் வழங்கலாம் என நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.
இந்த நிலையில், சிறையில் அடைக்கப்பட்டுள்ள பேராசிரியரை காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி போலீசார் முடிவு செய்துள்ளனர். அது தொடர்பாக, நேற்று காலை நாகர்கோவில் ஜே.எம்-1 கோர்ட்டில் மனுத் தாக்கல் செய்து உள்ளனர். இது தொடர்பான தீர்ப்பு இன்று வழங்கப்பட உள்ளது.