சர்வதேச சுற்றுலாத்தலமான கன்னியாகுமரிக்கு தினமும் உள்நாடு, வெளிநாட்டிலிருந்து ஏராளமான சுற்றுலாப்பயணிகள் வந்து செல்கின்றனர். தற்போது ஐயப்ப சுவாமி சீசன் தொடங்கியுள்ளதால் சுற்றுலாப் பயணிகள், பக்தர்கள் என ஆயிரக்கணக்கானோர் கன்னியாகுமரிக்கு வருகின்றனர்.
கடற்கரைச்சாலை பகுதியிலிருந்து கடலின் அழகை சுற்றுலாப்பயணிகள் ரசிக்க, சாலையோரக் கடைகள், தள்ளுவண்டிகள் ஆகியவற்றை நிறுத்தக்கூடாது என மாவட்ட நிர்வாகம் கெடுபிடி காட்டி வருகிறது.
இந்நிலையில் சுற்றுலாப் பயணிகள் அதிகமாக குவியும் இடமான காந்தி மண்டபம் பகுதியில் தரைக்குக் கீழ் பதிக்கும் மின் கேபிள்களுக்கான ஏராளமான ரீல்களை, கடந்த சில வாரங்களுக்கு முன்பு மின்வாரிய பணியாளர்கள் கொண்டு வந்தனர்.
அதன் பின் அங்கு எந்த விதமான பணிகளும் நடைபெறவில்லை. இது சுற்றுலாப்பயணிகளுக்கும், பக்தர்களுக்கும் இடையூறாக உள்ளது.
இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறும்போது, 'கன்னியாகுமரியை அழகுபடுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஆனால் இந்த மின் வயர் ரீல்களை மிகவும் முக்கியமான பகுதியான காந்தி மண்டபம் முன்பு கொண்டு வந்து போட்டுள்ளனர். மாவட்ட அலுவலர்கள் உடனடியாக பணிகளைத் தொடங்க வேண்டும் அல்லது அவற்றை அங்கிருந்து அப்புறப்படுத்திவிட்டு பணி செய்யும்போது திரும்ப கொண்டு வரவேண்டும். தேவையில்லாமல் இங்கு இடையூறாகக் கொண்டு போடப்பட்டுள்ளதால், பக்தர்கள் நடந்து செல்லக்கூட முடியாமல் உள்ளது' என்றார்.
இதையும் படிங்க: ஒகேனக்கல் விஐபி வழி - மக்கள் பயன்பாட்டிற்கு திறக்க கோரிக்கை!