கன்னியாகுமரி: தக்கலை அருகே உள்ள திருவிதாங்கோடு சேவியர்புரம் பகுதியில் வசித்து வருபவர் ஸ்ரீதரன் (வயது 51). இவரது மனைவி அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். இவர்களது மகன் குருநாத் (வயது 21), நாகர்கோவிலில் உள்ள தனியார் கல்லூரியில் 3ஆம் ஆண்டு படித்து வந்தார்.
இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் 24ஆம் தேதி மாணவன் வீட்டில் தனியாக இருந்த போது தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தக்கலை போலீசார் வழக்கு பதிவு செய்து குருநாத் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வந்தனர். விசாரணைக்காக அவரது செல்போன் மற்றும் லேப்டாப் ஆகியவற்றை போலீஸ் நிலையம் எடுத்துச் சென்று அதனை ஆய்வு செய்தனர். அப்போது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஆன்லைன் மோசடி: அதில் குருநாத் ஆன்லைனில் லோன் வாங்கி இருப்பதும், ஆன்லைன் டிரேடிங்கில் ஈடுபட்டதும் தெரிய வந்துள்ளது. பல்வேறு ஆன்லைன் செயலிகள் மூலம் லோன் வாங்கி உள்ள அவர், அதை பல முறை திருப்பி கொடுத்துள்ளார். ஆனால் தாங்கள் இன்னமும் வட்டி கட்ட வேண்டி உள்ளது என்று தொடர்ந்து பல்வேறு ஆன்லைன் எண்களில் இருந்து அவருக்கு நிர்பந்தம் வந்திருப்பது போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
நிர்பந்தம் செய்துவந்த மோசடி கும்பலிடம் இருந்து ஒரு கட்டத்தில் அது மிரட்டலாக மாறி உள்ளது. குருநாத் வாட்ஸ் அப்பில் ஆன்லைன் மோசடி கும்பலை சேர்ந்தவர்களிடம் தன்னால் இதற்கு மேல் முடியாது என்றும், நிறைய பணம் கொடுத்து விட்டேன் என்றும், இதற்கு மேல் என்னை நீங்கள் நிர்பந்தப்படுத்தினால் என் வாழ்க்கையை முடித்து கொள்வதை தவிர எனக்கு வேறு வழி இல்லை என்றும் வாய்ஸ் ரெக்கார்டிங்கில் கூறியிருப்பது தெரிய வந்துள்ளது.
மார்பிங் செய்வதாக மிரட்டல்: அவரது நடவடிக்கையை தங்களுக்கு சாதகமாக எடுத்துக் கொண்ட மோசடி கும்பல் மாணவன் குருநாத்தின் புகைப்படத்தை மார்பிங் செய்து, நிர்வாணமாக இருப்பது போன்று சித்தரித்து அவருக்கே அனுப்பி உள்ளதாக கூறப்பட்டு உள்ளது. உடனடியாக நாங்கள் சொல்லும் பணத்தை கட்டா விட்டால் இந்த புகைப்படத்தை இன்டர்நெட்டில் பதிவிடுவோம் என அந்த கும்பல் மிரட்டியதாக கூறப்படுகிது.
மேலும், உறவினர்கள், தாய், தந்தை அனைவருக்கும் அனுப்பி வைப்போம் என்று மிரட்டியதாகவும் இதனால் தான் குருநாத் தற்கொலை முடிவை எடுத்துள்ளதாகவும் காவல் துறையினரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதுதொடர்பாக மகனுடைய சாவுக்கு காரணமான ஆன்லைன் மோசடி கும்பல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் குருநாத்தின் பெற்றோர் புகார் அளித்து உள்ளனர்.
புகாரை பெற்று கொண்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹரி கிரண் பிரசாத், மாணவன் குருநாத் தற்கொலைக்கு காரணமான ஆன்லைன் மோசடி கும்பலை பிடிக்க சைபர் கிரைம் போலீசாருக்கு உத்தவு அளித்து உள்ளதாகவும் சைபர் கிரைம் போலீசார் தனிப்படை அமைத்து தேடி வருவதாகவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: பல்லடத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேரை கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது! கைதான நபருக்கு கால் முறிவு எப்படி?