கன்னியாகுமரி மாவட்டத்தில், நாடாளுமன்ற இடைத்தேர்தல் மற்றும் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுவதை தொடர்ந்து தேர்தல் விதிமுறைகள் குறித்து அனைத்துக் கட்சி பிரமுகர்கள், காவல் துறை அலுவலர்கள் மற்றும் தேர்தல் அலுவலர்களுடன் கலந்தாய்வுக் கூட்டம், நாகர்கோவிலில், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், ஆட்சியர் அரவிந்த் தலைமையில் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன், திமுக சார்பில் வழக்கறிஞர் லீனஸ்ராஜ், காங்கிரஸ் மாவட்ட தலைவர் ராதாகிருஷ்ணன், கம்யூனிஸ்ட் சார்பில் கண்ணன் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
அதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அரவிந்த் செய்தியாளர்களிடம் கூறுகையில், “கன்னியாகுமரி மாவட்டத்தில் 200க்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகள் பதற்றமானவை எனக் கண்டறியப்பட்டுள்ளன. அங்கு வாக்களிக்கும் மக்களுக்கு குழப்பம் ஏற்படாத வகையில் பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
கேரளா மற்றும் தமிழ்நாட்டில், ஒரே நாளில் வாக்குப்பதிவு நடைபெறுவதால், தமிழ்நாடு- கேரளா எல்லை பகுதிகளில் இரட்டை வாக்குரிமை வைத்திருப்பவர்கள் இரு மாநிலங்களிலும் வாக்குப்பதிவு செய்ய வாய்ப்பு இல்லை. இதுகுறித்து எல்லை பகுதிகள் கண்காணிக்கப்பட்டு வருகின்றன” என்றார்.
இதைத்தொடர்ந்து பேசிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன், “தேர்தல் காலங்களில் பிரச்சினைகளில் ஈடுபடலாம் என 300 பேர் அடையாளம் காணப்பட்டு, அவர்கள் மீது 110 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் தனியாரிடம் உள்ள 434 துப்பாக்கிகளில் 97 துப்பாக்கிகள் தவிர ஏனைய துப்பாக்கிகள் அனைத்தும் சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களில் ஒப்படைக்கப்பட்டுள்ளன. இதில் மீதமுள்ள துப்பாக்கிகள் ஓரிரு நாள்களில் ஒப்படைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது” என்றார்.
இதையும் படிங்க: 'சாதி அடிப்படையில் உள் ஒதுக்கீடு... தேர்தல் ஆதாயம் பெற கூட்டுச்சதி!'