கன்னியாகுமரி: நாகர்கோவில் அருகே புத்தளம் ஊராட்சிக்கு உட்பட்ட ஊர், வீரபாகுபதி. இங்கு அமைந்துள்ள மண்டபம் ஒன்றில் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக கிறிஸ்தவ ஜெபக்கூடம் செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
ஜெபக்கூடம் அமைந்துள்ள தெருவில் கடந்த 3 மாதங்களாக, தெருவிளக்கு கேட்டு அப்பகுதியைச்சேர்ந்தவர்கள், 15ஆவது வார்டு கவுன்சிலர் விஜய கல்யாணியிடம் கோரிக்கை வைத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனத் தெரிகிறது. பின், திமுகவைச் சேர்ந்த பேரூர் செயலாளர் பிரதாப் சிங் என்பவரிடம் ஜெபக்கூடத்தினர் இதே கோரிக்கையை வைத்துள்ளனர். கூறிய 2ஆவது நாளே தெருவிளக்கு அமைக்கப்பட்டுள்ளது.
இதனால் கடந்த 2 மாதங்களாக கவுன்சிலரிடம் கோரிக்கை வைத்தும் தெரு விளக்கு அமைக்கவில்லை என்றும்; பிரதாப் சிங் 2 நாளில் தெருவிளக்கு அமைத்து கொடுத்துள்ளார் எனவும், அவருக்கு நன்றி தெரிவித்தும் போஸ்டர்கள் ஒட்டியுள்ளனர்.
இதில் ஜெபக்கூடத்தின் பெயரை குறிப்பிட்டு நன்றி போஸ்டர்கள் ஒட்டியுள்ளதைக் கண்டித்தும், இப்பகுதியில் இப்படி ஒரு ஜெபக்கூடம் கிடையாது எனக் கூறியும் கண்டன போஸ்டர்களை எதிர் தரப்பினர் ஒட்டி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர்.
இதுஒரு புறம் இருக்க கடந்த ஒரு வாரமாக ஜெபக்கூடத்தின் முன்பு அனுமதியின்றி ஜெபக்கூடம் நடைபெறுவதாக, இந்து முன்னணி உட்பட சங்பரிவார் அமைப்பினர் சிலர் ஆர்ப்பாட்டம் நடத்தி வந்துள்ளனர்.
நேற்று(அக்.03) அதே போன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் போலீசாரின் தடையையும் மீறி ஜெபக்கூடத்தை முற்றுகையிட்டு, பிரார்த்தனையில் ஈடுபட்டவர்களையும் தடுத்துள்ளனர். இது தொடர்பான காட்சிகள் சமூக வலை தளங்களில் வைரலானது.
பின், சுசீந்திரம் காவல் நிலையத்தில் ஜெபசிங் என்பவரின் புகாரின் பேரில் இந்து முன்னணியினர், வார்டு கவுன்சிலர் உட்பட 8 பேர் மீது அத்துமீறி தகாத வார்த்தைகள் பேசுதல், பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல் உட்பட 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
ராஜாக்கமங்கலம் ஒன்றிய இந்து முன்னணி பொதுச்செயலாளர் சுரேஷ் கைது செய்யப்பட்டார். தலைமறைவான வார்டு கவுன்சிலர் விஜயகல்யாணி, அவரது கணவர் கண்ணன் உட்பட 7 நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: தருமபுரம் ஆதீனத்தில் ஆயுதபூஜை விழா