மகாத்மா காந்தியடிகளின் அஸ்தி 1948ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 12ஆம் தேதி கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் கரைக்கப்பட்டது. அஸ்தி கரைப்பதற்கு முன்பாக பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக கடற்கரையில் வைக்கப்பட்டது. அந்த இடத்திலேயே 1956ஆம் ஆண்டு அவருக்கு நினைவு மண்டபம் கட்டப்பட்டது.
இங்கு, ஒவ்வொரு ஆண்டும் காந்தியடிகளின் பிறந்தநாளான அக்டோபர் 2ஆம் தேதி சூரியஒளி அங்குள்ள காந்தி மண்டபத்தினுள் உள்ள அஸ்தி கட்டிடத்தில் விழும்படி கட்டிட அமைப்பு அமைக்கப்பட்டுள்ளது. இது இந்த மண்டபத்தில் சிறப்பம்சமாகும். அதேபோல், இந்தாண்டு நண்பகல் சரியாக 12மணிக்கு அஸ்தி கட்டிடத்தில் சூரியஒளி விழுந்தது. இதனை சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசித்தனர்.
முன்னதாக கட்டடத்தில் தமிழ்நாடு அரசு சார்பில் மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு. வடநேரே, தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய்சுந்தரம் உள்ளிட்டோர் காந்தியடிகளின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இதேபோல், காந்தி நினைவு மண்டபத்தின் அருகிலுள்ள காமராஜர் மணிமண்டபத்தில் உள்ள அவரது முழு உருவ சிலைக்கு மலர் மாலைகள் அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
இதையும் படிங்க: மகாத்மாவின் நினைவுகளை இன்றும் சுமக்கும் மதுரை!