கன்னியாகுமரி மாவட்டம் பெரியநாயகி தெருவைச் சேர்ந்தவர் செல்வம் (40). இவர் மீன்பிடித் தொழில் செய்வதற்காக முன் பணமாக நெல்லை மாவட்டம் இடிந்த கரையைச் சேர்ந்த டைட்டஸ் என்பவரிடம் ஒரு லட்சம் ரூபாய் பணத்தை வாங்கியுள்ளார்.
ஆனால், செல்வம் பணத்தை திரும்பத் தராமல் காலம் தாழ்த்தியதால், டைட்டஸ் கன்னியாகுமரி பங்குப் பேரவையில் புகார் அளித்துள்ளார். இந்நிலையில் செவ்வாய்க்கிழமை அதிகாலை செல்வம், கன்னியாகுமரியில் இருந்து நெல்லை மாவட்டம் இடிந்தகரை பகுதியில் கடலில் மீன் பிடித்துக்கொண்டு திரும்பியபோது, டைட்டஸ் தலைமையில் சுமார் இருபதுக்கும் மேற்பட்ட மீனவர்கள் ஆயுதங்களுடன் சென்று சுற்றிவளைத்து, 12 மீனவர்களையும், இரண்டு படகுகளையும் சிறைப்பிடித்து இடிந்தகரைக்கு கொண்டு சென்று சிறை வைத்துள்ளனர்.
இது தொடர்பாக கன்னியாகுமரி மீனவர்கள் கடலோரப் பாதுகாப்பு காவல் துறையினரிடம் புகார் கொடுத்துள்ளனர். மேலும் சிறைப்பிடிக்கப்பட்ட மீனவர்களை விடுவிக்கும் வரை கன்னியாகுமரி மாவட்டத்தில் தொழில் முடக்கம் செய்து அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். இதனால் கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆரோக்கியபுரம் முதல் நீரோடி வரையிலான சுமார் 44 மீனவ கிராமங்களில் உள்ள 300-க்கும் மேற்பட்ட நாட்டுப்படகு விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லாமல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதனால் அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவுகிறது.