அசைவப் பிரியர்களில் மிகுதியானவர்கள் மீன் வகைகளை விரும்பி சாப்பிடுகின்றனர். இதில் விலை மலிவாகவும், எளிதிலும் கிடைக்கின்ற மீன் வகைகளில் ஒன்று ’சாளை’ மீனாகும். கிழக்கு கடற்கரை, மேற்கு கடற்கரைப் பகுதிகளில் மீன் பிடித்தலில் ஈடுபடுகின்ற மீனவர்களிடம் சீசன் காலங்களில் டன் கணக்கில் சாளை மீன்கள் பிடிபடுவது வழக்கமான ஒன்றாகும்.
சுவையான மற்றும் மலிவான விலையுடைய மீன் வகை என்பதால் வாடிக்கையாளர்கள் விரும்பி வாங்கி செல்வார்கள். ஆனால் சமீப காலமாகச் சாளை மீன்களின் வரத்துக் குறைந்துள்ளது. இது மீன் உணவு பிரியர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பத்து ரூபாய்க்கு 4 சாளை மீன்கள் வரை கிடைத்து வந்த சூழலில் இப்போது ஒரு சாளை பத்து ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த ஆண்டு சாளை மீன் வளம் குறைந்திருந்த நிலையில் இதன் தொடர்ச்சியாக இந்த ஆண்டும் சாளை மீன்கள் வளம் குறையும் என்று கடல் மீன் வள ஆராய்ச்சி துறையினர் ஏற்கனவே கணித்திருந்தனர்.
இதற்கு அரபிக் கடலின் மத்தியப் பகுதிகளில் வெப்பம் அதிகரித்ததே முக்கிய காரணமாகக் கருதப்படுகிறது. கடலில் "எல்நினோ" காரணமாகச் சாளை மீன் வளம் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கேரள மாநிலம் கொச்சியில் உள்ள மீன் வள ஆராய்ச்சி நிறுவன நிபுணர்களும் ஏற்கனவே அறிவிப்பு வெளியிட்டு இருந்தனர்.
சாளை மீன்கள் வளம் குறைந்து வருவது நாட்டுப் படகு மீனவர்களின் வாழ்வாதாரத்தைக் கடுமையாக பாதித்துள்ளது. மேலும் மார்க்கெட்டில் மீன் வரத்து குறைந்துள்ளதால் சாதாரண ஏழை மக்களையும் கவலையடையச் செய்துள்ளது.