கன்னியாகுமரி: குமரிக்கடல் மற்றும் மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாகப் பலத்த சூறைக்காற்று வீசி வந்ததால், பெரும்பாலான பைபர் மற்றும் விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லாமல் இருந்து வந்தனர். தொடர்ந்து காற்றின் தாக்கம் அதிகரித்த நிலையில் ஒட்டு மொத்தமாக குளச்சல், முட்டம் மற்றும் தேங்காய்பட்டணம் ஆகிய மீன்பிடி துறைமுகங்களைச் சேர்ந்த 10,000க்கும் மேற்பட்ட பைபர் படகு மற்றும் 300க்கும் மேற்பட்ட விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லாமல், படகுகளைத் துறைமுகங்களிலேயே நிறுத்தி வைத்திருந்தனர்.
இதனால் மீன் வரத்து இன்றி துறைமுகங்கள் வெறிச்சோடி காணப்பட்டது. மேலும் கடந்த 3 நாட்களாகக் கடலில் காற்றின் வேகம் குறைந்த நிலையில், படிப்படியாக பைபர் மற்றும் விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனர். ஆனால், போதிய மீன் கிடைக்காததால் ஏமாற்றத்துடனே மீனவர்கள் கரை திரும்பி வந்தனர்.
இந்த நிலையில் நேற்று (பிப்.8) இரவு முதல் மீண்டும் அரபிக்கடல் பகுதியில் பலத்த காற்று வீசி வருவதோடு, கடல் சீற்றத்துடன் காணப்பட்டு வருகிறது. அதேநேரம் குளச்சல், முட்டம் மற்றும் தேங்காய்பட்டணம் துறைமுகங்களைச் சேர்ந்த 8,000க்கும் மேற்பட்ட பைபர் படகு மற்றும் 800க்கும் மேற்பட்ட விசைப்படகு மீனவர்கள் காற்றின் காரணமாகவும், மீன்கள் அதிக அளவில் கிடைக்காத காரணத்தாலும் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை.
இருப்பினும், குளச்சல் மீன்பிடி துறைமுக பெழிமுகத்தில் மீன்பிடி தொழிலில் ஈடுபட்ட ஒரு சில பைபர் படகு மீனவர்கள், குறைந்த அளவிலான மீன்களுடன் கரை திரும்பினர். இதனால் மீன்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. சாதாரணமாக தலா 1 கிலோ 800 ரூபாய் வரை விற்பனை ஆகும் வஞ்சிரம் மீன் தற்போது 1,200 ரூபாய்க்கும், 250 ரூபாய்க்கு விற்பனை ஆகும் வெளவா மீன் 400 ரூபாய்க்கும், 100 ரூபாய்க்கு விற்பனை ஆகும் சூரை மீன் வகைகள் 250 ரூபாய்க்கும் மற்றும் 40 கிலோ எடை கொண்ட மயில் மீன் 9,000 ரூபாய்க்கும் விற்பனையானது. அதேபோல் அயலை, கொழிசாளை போன்ற மீன்களும் பல மடங்கு விலை உயர்ந்து விற்பனை செய்யப்படுகிறது.
இதையும் படிங்க: தொழில் போட்டியில் மீனவ படகுகள் மீது நாட்டு வெடிகுண்டு வீச்சு!