கன்னியாகுமரி மாவட்டத்தில் பாஜக சார்பில், ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்பட்ட ஏழை எளிய மக்களுக்கு அரிசி, காய்கறி உள்ளிட்ட நிவாரணப் பொருள்கள் ஆயிரம் பேருக்கு வழங்கப்பட்டன. இதில், முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு மக்களுக்கு நிவாரண பொருள்களை வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் கூறுகையில், "தமிழ்நாட்டில் மதுப்பழக்கம் ஓரளவு மறந்திருந்தது. ஆனால், நாளை (மே. 7) முதல் மதுக்கடைகள் திறப்பதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. மக்கள் கையில் பணம் இல்லாத நேரத்தில், மதுக்கடைகள் திறந்தால் அரசு கொடுக்கும் பணம் மதுக்கடைகளுக்கு செல்ல நேரிடும்.
எனவே மதுக்கடைகளை திறப்பதில் பரிசீலிக்க வேண்டும். தமிழ்நாடு அரசு ஆயிரம் ரூபாய் கொடுப்பது குறைவுதான். அரசின் சூழ்நிலைகளையும் கருத்தில் கொள்ள வேண்டும். இயற்கையின் சீற்றத்தால் நாம் மிகப் பெரிய கொடுமையைச் சந்தித்துள்ளோம். நாம் ஒருவருக்கு ஒருவர் உதவியாக இருக்கவேண்டும்.
இந்த நேரத்தைப் பயன்படுத்தி அரசியல் செய்யக்கூடாது. காசி விவகாரம் குமரி மாவட்டத்திற்கு மிகப்பெரிய தலைக்குனிவை ஏற்படுத்தியுள்ளது. சில பத்திரிகைகளில் அவர் பாஜக உறுப்பினர் என்று வெளிவந்துள்ளது. நாங்கள் விசாரித்தவரை கட்சிக்கும் அவருக்கும் தொடர்பில்லை. அவர் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அவருக்குக் கொடுக்கப்படும் தண்டனையைப் பார்த்து, இதுபோன்று குற்றங்களில் இனி யாரும் ஈடுபடக்கூடாது என்ற எண்ணம் வரவேண்டும்" என்றார்.
இதையும் படிங்க: கரோனாவால் மற்ற தொற்றுகள் அதிகரிக்கும் - யுனிசெஃப் கவலை