குமரி மாவட்டம், பரப்புவிளை பகுதியை சேர்ந்தவர் பிலிப்(27). இவரது வீட்டில் அருகில் வசித்து வந்தவர் மணி. பொதுபாதை தொடர்பாக இருவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது.
இந்நிலையில், 1988ம் ஆண்டு ஜூலை 28ல் பிலிப், அவரது சகோதரர் மோகன்தாஸ் ஆகியோர் பரப்பு விளையில் நின்றுகொண்டிருந்த போது, அவர்களிடம் மணி மற்றும் அவரது நண்பர் தேவதாஸ் ஆகியோர்த தகராறில் ஈடுபட்டனர்.
அப்போது, பிலிப்பை தேவதாஸ் கத்தியால் குத்தியுள்ளார். பலத்த காயமடைந்த பிலிப் அங்கேயே உயிரிழந்தார். தகராறில் மோகன்தாஸுக்கும் காயம் ஏற்பட்டது.
இதுகுறித்து, கருங்கல் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, மணியைக் கைது செய்தனர். தலைமறைவான தேவதாஸைத் தேடி வந்தனர். அவரை கண்டுபிடிக்க முடியாததால், மணி மீதான வழக்கை காவல்துறையினர் தனியாக நடத்தினர்.
இதில், அவருக்கு நீதிமன்றம் தண்டனை விதித்தது. இதை எதிர்த்து மணி மேல்முறையீடு செய்தார். இந்த மனு மீதான விசாரணை நடந்து வந்தபோது, 1994ஆம் ஆண்டு ஏப்ரல் 15ல் மணி உயிரிழந்தார்.
இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த தேவதாஸ், கேரள மாநிலத்தில் காசப்பன் என்ற பெயரில் வசித்து வந்தது தெரியவந்தது.
இதையடுத்து தனிப்படை காவல்துறையினர் கேரள மாநிலத்துக்குச் சென்று தேவதாஸை(58) கைது செய்து, நாகர்கோவிலுக்குக் அழைத்து வந்தனர்.
காசப்பன் என பெயரை மாற்றி, கேரளத்தில் தேவதாஸ் வசித்து வந்ததை காவல்துறையினர், நீதிமன்றத்தில் தக்க ஆதாரங்களுடன் நிரூபித்தனர்.
இந்த வழக்கை விசாரித்த மாவட்ட நீதிபதி கருப்பையா, கொலை வழக்கில் தேவதாஸுக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், 2 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து. மேலும்,மோகன்தாஸைத் தாக்கியதற்கு ஓராண்டு சிறைத்தண்டனையும், ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து, தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க உத்தரவிட்டார்.
கொலை நடந்து, சுமார் 31 ஆண்டுகளுக்குப் பிறகு, இந்த வழக்கில் நாகர்கோவில் மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது கவனிக்கத்தக்கது.