சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரியில் உள்நாடு, வெளிநாடுகளிலிருந்து தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் தற்போது உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் அதிகளவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த வைரஸின் தாக்கம் இந்தியாவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்திவிடாதவாறு மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.
அதன் ஒரு பகுதியாக தமிழ்நாட்டில் பொதுமக்கள் அதிகமாக கூடும் மால்கள், சினிமா தியேட்டர்கள் ஆகியவை மூடப்பட்டு, பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. பல இடங்களில் சுற்றுலா பயணிகள் வருகைக்கும் தடைசெய்யப்பட்டுள்ளன. இதன் காரணமாக மாநிலத்தின் சுற்றுலா பயணிகள் வருகை குறைந்து வெறிச்சோடி காணப்படுகிறது.
இதற்கிடையில், கன்னியாகுமரியில் கடல் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் மண்டபம், திருவள்ளுவர் சிலையை காண வழக்கம் போல் சுற்றுலாப் பயணிகள் வருகைதந்துள்ளனர். இதனால் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பூம்புகார் படகு போக்குவரத்து கழக வளாகத்தில் சுற்றுலாப்பயணிகளுக்கு கிருமி நாசினிகள் தெளிக்கப்பட்ட பின்னரே பயணிகள் அனுமதிக்கப்பட்டனர்.
மேலும், பயணிகள் உபயோகிக்கும் லைப் ஜாக்கெட்டுகளை ஒவ்வொரு முறையும் சுத்திகரிக்கப்பட்டும், பயணிகளின் கைகளை கிருமி நாசினி கொண்டு கழுவிய பின்னரே அனுமதியளிக்கப்பட்டும், பயணிகள் செல்லும் படகுகளையும் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்தும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதையும் படிங்க:கொடைக்கானலில் சுற்றுலாப் பயணிகளின் வாகனங்களுக்குத் தடை