கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே சிராயன்குழியை சேர்ந்தவர் மேக்ளின் ஜவகர். கடந்த அதிமுக ஆட்சியில் நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைகழகத்தில் நடைபெற்ற பேராசிரியர் நியமனத்தில் பல்கலைகழக துணைவேந்தருடன் இணைந்து சட்டப்பேரவை உறுப்பினர் பிரின்ஸ் முறைகேட்டில் ஈடுபட்டதாக தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
இதையடுத்து சட்டப்பேரவை உறுப்பினரின் மகன்களான டோனல், ரோனிஷ் ஆகியோர் அடியாட்களுடன் சிராயன்குழியிலுள்ள மேக்கிளின் வீட்டிற்கு சென்று கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்த சிசிடிவி ஆதாரங்களுடன் மார்த்தாண்டம் காவல்நிலையத்தில் புகார் அளித்தும் காவல்துறையினர் நடவடிக்கை எடுக்கவில்லை என தெரிகிறது.
இது குறித்து மேக்ளின் கூறுகையில், "மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைகழகத்தில் பேராசிரியர் நியமனத்தில் தகுதியுடையவர்களை நியமனம் செய்யாமல் துணைவேந்தர் பாஸ்கருடன் இணைந்து குளச்சல் தொகுதி காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர் பிரின்ஸ் முறைகேட்டில் ஈடுபட்டார்.
இந்த முறைகேடு குறித்து முகநூலில் வெளியிட்டதால் அவரது மகன்களை அனுப்பி வீட்டிலிருந்த தனது தாயாரிடம் தன் தலையை துண்டித்து கொலை செய்வதாக மிரட்டியுள்ளனர்.
மேலும் முறைகேடுகள் குறித்த ஆதாரங்களை எங்கு வேண்டுமானாலும் தாக்கல் செய்ய தயாராக உள்ளேன்" என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: டெல்டா செழித்தால் தமிழ்நாடே செழிப்படையும்!' - ஸ்டாலின்