கன்னியாகுமரி: சுசீந்திரம் அடுத்த தேரூர் பகுதியைச் சேர்ந்தவர் வனத்துறை ஊழியரான ஆறுமுகம் ஆரல்வாய்மொழி வன சோதனை சாவடியில் பணியிலிருந்தவர். இவரது மனைவி யோகேயேஸ்வரி, இந்தநிலையில் ஆறுமுகம் மற்றும் அவரது மனைவி யோகேஸ்வரி இருவரும் கடத்த 2011 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் பத்தாம் தேதி நாகர்கோவில் பகுதியில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளனர்.
அப்போது கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் அடுத்த தேரூர் இசக்கி அம்மன் கோயில் எதிரே ஆறுமுகம் மற்றும் அவரது மனைவி சுட்டுக் கொலை செய்யப்பட்டனர். இந்த கொலைக்கான காரணம் பின்னணி குறித்து தெரியாத நிலையில் இந்த வழக்கு தொடர்பாக அப்போதைய அதிமுக நிர்வாகி சகாயம் உட்பட கூலிப்படையினர் என 11 பேர் வெவ்வேறு கால கட்டங்களில் கைது செய்யப்பட்டனர்.
இந்த நிலையில் இந்த வழக்கானது 12 ஆண்டுகளாக நடந்து வருகிறது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்புதான் இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் செய்யப்பட்டது. இருந்தபோதிலும் இரட்டை கொலைக்கான பின்னணி என்ன என்பது குறித்து முழு விவரங்கள் வெளியாகாமலிருந்து வந்தன. மேலும் கொலை நடத்தப்பட்ட இடத்தில் கைப்பற்றப்பட்ட துப்பாக்கி ஒன்றும் அதே போல் இருவரின் உடல்களிலிருந்த துப்பாக்கி குண்டுகளும் பொருத்தம் இல்லாமல் இருக்கிறது என அப்போது போலீசார் விசாரணையில் தெரியவந்தது.
மேலும், இது குறித்து தொடர்ந்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் இச்ச சம்பவத்திற்குத் துப்பாக்கி சப்ளை செய்த சதாசிவம் என்பவரைச் சென்னை சாலிகிராமத்தில் வைத்து ஒருங்கிணைந்த குற்றப் புலனாய்வுத்துறை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் அவரை சிபிசிஐடி போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
இந்த நபர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருவது போல் சென்னையில் 12 ஆண்டுகளாக பதுங்கி இருந்தது விசாரணையில் தெரியவந்தது. இவர் மூலமாக இந்த சம்பவம் தொடர்பாக முக்கிய குற்றவாளிகள் கண்டுபிடிப்பதற்கான முயற்சியில் சிபிசிஐடி போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
தமிழகத்தையே உலுக்கிய சுசீந்திரம் இரட்டை கொலை வழக்கில் 12 ஆண்டு காலமாக தலைமறைவாக இருந்த ஏ8 குற்றவாளி நள்ளிரவில் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த வழக்கில் தலைமறைவு குற்றவாளிகளான A11, A14 குற்றவாளிகளையும் கைது செய்வதற்கு தீவிர முயற்சியில் போலீசார் இறங்கி உள்ளனர்.
இதையும் படிங்க: சென்னையில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 23 பேர் குண்டர் சட்டத்தில் கைது!