கன்னியாகுமரி மாவட்டம் சின்ன முட்டத்தில் மீன்பிடித் துறைமுகம் உள்ளது. இங்கிருந்து சுமார் 300-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் கடலுக்குச் சென்று மீன் பிடித்துவருகின்றனர். கன்னியாகுமரி சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த மீனவர்கள் உள்பட நேரடியாகவும் மறைமுகமாகவும் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இந்தத் தொழிலில் ஈடுபட்டுவருகின்றனர்.
சின்னமுட்டம் விசைப்படகு மீனவர்கள் தற்போது கடலில் 48 மணி நேரம் தங்கி மீன் பிடித்துவருகின்றனர். திங்கள்கிழமை மீன்பிடிக்கச் செல்லும் மீனவர்கள் புதன்கிழமை கரை திரும்புவர். மீண்டும் வியாழன் காலை கிளம்பிச் சென்று சனிக்கிழமை கரைக்குத் திரும்புவர். இதனால் சின்னமுட்டம் துறைமுகத்தில் புதன், சனிக்கிழமைகளில் மீன் சந்தை கூடுவது வழக்கம்.
இரண்டு நாள்கள் மட்டும் இச்சந்தையில் மீன் ஏலம் எடுப்பதற்காக உள்ளூர் வியாபாரிகள் மட்டுமின்றி அண்டை மாநிலமான கேரளாவிலிருந்தும் ஏராளமானோர் வருகைதருவார்கள். தற்போது கேரளா உள்பட இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
கேரளாவிலிருந்து இந்த வைரஸ் தொற்று தமிழ்நாட்டுக்குள் பரவாமல் தடுக்கும்வகையில், சின்னமுட்டத்திலிருந்து மீன்பிடிக்கச் செல்லும் விசைப்படகு மீனவர்கள் ஆழ் கடலுக்குச் சென்று மீன் பிடித்துவரும் மீன்களை விற்கத் தடைவிதித்துள்ளது.
இதனால் மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்லாமல் கவலையில் ஆழ்ந்துள்ளனர். வாரம் இருமுறை இந்த மீன் சந்தையில் பல கோடிகளுக்கு மீன்கள் ஏற்றுமதியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: கரோனா குறித்து வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை - மதுரை மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய்