கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த 35 வயதான பெண் மசாஜ் சென்டர் நடத்தி வருவதாக கூறப்படுகிறது. கணவர் இறந்து விட்டதால் மகளுக்கு பாதுகாப்பு இல்லை என்று கருதிய அவர் தனது மகளை காப்பகத்தில் சேர்த்து படிக்க வைத்து வருகிறார். தான் நடத்தி வரும் மசாஜ் சென்டருக்கு நடந்து செல்வதை அவர் வழக்கமாக கொண்டு உள்ளார்.
இந்நிலையில் மேல்புறம் வழியாக மசாஜ் சென்டருக்கு செல்லும் அந்த பெண்ணை அதே பகுதியில் உள்ள ஆட்டோ ஓட்டுநர்கள் சிலர் தினசரி கிண்டல் செய்து வந்ததாக கூறப்படுகிறது. மேலும் தனிமையில் இருக்கும் பெண்ணிடம் உல்லாசமாக இருக்கலாம் என ஓட்டுநர்கள் அழைத்ததாக சொல்லப்படுகிறது.
இதுபோன்ற தொடர் தொந்தரவுகளால் தற்காப்புகாக தன் பையில் மிளகாய் பொடி, சிறிய கத்தி உள்ளிட்ட தற்காப்பு பொருட்களை அந்த பெண் வைத்து உள்ளார். இந்த சம்பவம் வழக்கம் போல் நடந்து கொண்டிருந்ததாக கூறப்படும் நிலையில், திடீரென ஆட்டோ ஓட்டுநர்கள் அந்த பெண்ணிடம் எல்லை மீறி நடந்து கொண்டதாக சொல்லப்படுகிறது.
இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அந்த பெண் தன் கைவசம் வைத்திருந்த மிளகாய்ப் பொடியை எடுத்து ஆட்டோ டிரைவர்கள் மீது எறிந்து தன்னை காப்பாற்ற முயன்று உள்ளார். உடனே அங்கு நின்று இருந்த ஆட்டோ ஓட்டுநர்களில் சிலர் அவரை பலவந்தமாக பிடித்து துணியால் கை கால்களை கட்டியும், அருகில் இருந்த மின் கம்பத்தில் கட்டி வைத்து துன்புறுத்தியதாக கூறப்படுகிறது.
மேலும் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக மின் கம்பத்தில் கட்டி வைக்கப்பட்டு இருந்த அவர் வலி தாங்க முடியாமல் மயங்கியதாக கூறப்படுகிறது. மின் கம்பத்தில் கட்டி வைக்கப்பட்டு இருந்ததை பார்த்த அந்த வழியாக சென்ற இளைஞர்கள், செல்போன்களில் புகைப்படம் எடுத்து அருகில் உள்ள அருமனை போலீசாருக்கு தகவல் அனுப்பி உள்ளனர்.
தகவல் அறிந்த அருமனை போலீசார் விரைந்து வந்து மின்கம்பத்தில் கட்டிவைக்கப்பட்டு இருந்த பெண்ணை மீட்டு காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையின் போது பெண்மணி அவருக்கு நேர்ந்த கொடுமைகளை போலீசாரிடம் தெரிவித்ததுடன் இந்த சம்பவம் தொடர்பாக புகார் அளித்து உள்ளார்.
அதன்பேரில் மேல்புறத்தை சேர்ந்த சசி, வினோத், பாகோடு பகுதியைச் சேர்ந்த திபின், விஜயகாந்த், அரவிந்த் ஆகிய 5 பேர் மீதும் பெண்ணை தடுத்து நிறுத்தி பாலியல் தொந்தரவு செய்தது, தகாத வார்த்தை பேசியது, அவமானப்படுத்தி தாக்கியது, மற்றும் மிரட்டியதாக 4 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த சம்பவத்தில் தொடர்புடைய ஆட்டோ ஒட்டுனர்கள் சசி, வினோத், விஜயகாந்த் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள 2 ஆட்டோ ஓட்டுனர்களையும் போலீசார் தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: இலவச லேப்டாப் அல்லது டேப் வழங்கல்.. அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்..