கன்னியாகுமரி: அதிமுக கட்சியை சேர்ந்தவர் லதா சந்திரன். இவர் நாகர்கோவில் அருகே சுங்கான்கடை பகுதியில் வசித்து வருகிறார். இவர் அதிமுகவின் பேரூர் நிர்வாகியாகவும் பதவி வகித்து வருகிறார். கடந்த 2011 ம் ஆண்டிலிருந்து 2016 வரை ஆளூர் பேரூராட்சி தலைவராக பதவி வகித்து வந்து உள்ளார்.
பேரூராட்சி தலைவராக பதவி வகித்த போது பல முறைகேடுகளில் ஈடுபட்டு, 120 சவரன் தங்க நகைகள், சொகுசு வாகனங்கள், பல்வேறு சொத்துக்கள் வாங்க, லஞ்ச பணத்தை முதலீடு செய்து உள்ளதாக சுங்கான்கடை பகுதியை சேர்ந்த சுகுமாரன் என்பவர் 2019ஆம் ஆண்டு காவல் நிலையத்தில் புகார் அளித்து இருந்தார்.
ஆனால் விசாரணை மந்த நிலையில் நடந்து வந்த நிலையில், அவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து உள்ளார், அதன் அடிப்படையில் தற்போது உயர் நீதிமன்ற மதுரை கிளை, லதா சந்திரனின் வீட்டில் சோதனையிட்டு, விசாரணை மேற்கொள்ள லஞ்ச ஒழிப்புத் துறைக்கு உத்தரவிட்டு உள்ளது.
அதன் பேரில், இன்று (ஜூலை 14) லஞ்ச ஒழிப்புத்துறை கூடுதல் கண்காணிப்பாளர் ஹெக்டேர் தர்மராஜ், ஆய்வாளர் லதா ஆகியோர் தலைமையிலான லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் குழு, அதிகாலை 5 மணிக்கு சுங்கான்கடையில் உள்ள லதா சந்திரன் வீட்டிற்கு சென்று உள்ளனர்.
இதையும் படிங்க: பாஜக நிர்வாகி S.G. சூர்யாவிற்கு வழங்கப்பட்ட நிபந்தனை ஜாமீனில், நிபந்தனை மாற்றத்திற்கு அனுமதி!
அங்கு அதிமுக நிர்வாகி லதா சந்திரன் மற்றும் அவரது கணவர், மகன்கள் இருந்து உள்ளனர். அவர்கள் அனைவரிடமும் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தி உள்ளனர். அதிமுக நிர்வாகி லதா சந்திரன் பேரூராட்சி தலைவராக இருந்தபோது வாங்கிய சொத்துக்களை குறித்த விவரங்களை அதிகாரிகள் கேட்டு அறிந்தனர்.
இதை தொடர்ந்து அவர் வாங்கிய சொத்து தொடர்பான ஆவணங்களை சரி பார்த்து வருகின்றனர், போலீசார் கேட்ட விவரங்களுக்கு அதிமுக நிர்வாகி லதா சந்திரன் பதில் அளித்து உள்ளார். தொடர்ந்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள். இன்று அதிகாலை தொடங்கிய இந்த சோதனை, தொடர்ந்து நீடித்து வருகிறது.
முன்னாள் பேரூராட்சி தலைவர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்திய சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதிமுக லதா சந்திரன் ஏற்கனவே ஆளுர் பேரூர் அ.தி.மு.க. செயலாளராகவும் இருந்துள்ளதும். மேலும் தற்போது வீராணி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க தலைவராகவும் உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: எதிரிகளை வெல்ல சத்ரு சம்ஹார பூஜை:ஜெயலலிதா முதல் எடப்பாடி பழனிசாமி வரை..பின்னணி என்ன?