கன்னியாகுமரி: தேர்தல் பிரச்சாரத்தின் போது அதிமுக வேட்பாளர் முன்னிலையில் ஏற்பட்ட மோதலில் 8 பேர் காயமடைந்தனர்.
தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் மற்றும் கன்னியாகுமரி மக்களவைக்கான இடைத் தேர்தல் வரும் ஆறாம் தேதி நடைபெறவுள்ளது. வாக்குப்பதிவுக்கு இன்னும் ஆறு நாட்களே உள்ள நிலையில், தலைவர்கள் மற்றும் வேட்பாளர்கள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர்.
கன்னியாகுமரி சட்டப்பேரவை தொகுதி அதிமுக வேட்பாளராக போட்டியிடும் தளவாய்சுந்தரம் இன்று சின்னமுட்டம் மீனவ கிராமத்திற்கு வாக்கு சேகரிக்க சென்றார். அங்குள்ள பங்குத் தந்தையை அவர் சந்திக்க சென்ற போது, வெளியில் கூடியிருந்த அதிமுக தொண்டர்கள் பட்டாசு வெடித்துள்ளனர்.
இதற்கு அந்தப் பகுதியில் கூடியிருந்த அதிமுகவின் ஒரு பிரிவினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அதிமுக தொண்டர்களிடையே திடீர் மோதல் ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. இதனையடுத்து கல் வீச்சு, ஒருவருக்கொருவர் மோதியதில் அந்த இடம் போர்க்களம் போல் காட்சி அளித்தது.அங்கிருந்த தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் சிதறி ஓடினர்.
இதையறிந்த வேட்பாளர் தளவாய்சுந்தரம், உடனடியாக தகராறில் ஈடுபட்ட அதிமுக தொண்டர்களை சமாதானப்படுத்தினார். இந்த மோதலில் காயமடைந்த 8 பேர் கன்னியாகுமரி, கொட்டாரம், நாகர்கோவில் உள்ளிட்ட ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
அதிமுக வேட்பாளர் முன்னிலையில் அதிமுக தொண்டர்களிடையே நடந்த இந்த மோதல் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக காவல் நிலையத்தில் வழக்கு எதுவும் பதியப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.