கன்னியாகுமரி மாவட்டம் நித்திரவிளை அருகே செக்கிட்டுவிளை பகுதியை சேர்ந்தவர் வில்சன். இவரது மகன் ரெஜீஷ் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். இவருக்கு திருமணமாகி மனைவி, ஒரு குழந்தை உள்ளது.
ரெஜீஷ் வெளிநாட்டில் வேலை செய்துவரும் காரணத்தால் அவரது மனைவி, தாயார் வீட்டில் வசித்து வருகிறார். கணவர் ஊருக்கு வரும் நாட்களில் மட்டும் அவருடன் வீட்டில் வசிப்பது வழக்கம். இதனால் மகனின் வீடு பூட்டியே கிடப்பதால் தினமும் காலை, மாலை வேளைகளில் ரெஜீஷின் தந்தை வந்து வீட்டை பராமரித்து வந்திருக்கிறார்.
இந்த நிலையில் இன்று மாலை வழக்கம்போல் வில்சன் வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் முன்பக்க கதவு திறந்து கிடந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்து வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது, வீட்டின் உள்ளே இரண்டு அறையின் கதவுகளும் திறந்து கிடந்துள்ளன. கதவுகள் அனைத்தும் இரும்பு கடப்பாரைகளை பயன்படுத்தி உடைக்கபட்டிருப்பது தெரியவந்தது.
மேலும் சாவிகளை பயன்படுத்தி பீரோவை திறந்து, அதில் இருந்த 27 ஆயிரம் ரூபாய் பணத்தையும் திருடிச் சென்றுள்ளனர்.
இதனையடுத்து வில்சன் தனது மருமகளுக்கும், நித்திரவிளை காவல்துறைக்கும் தகவல் தெரிவித்தார். தகவல் அறிந்து சம்பவ இடம் வந்த நித்திரவிளை காவலர்கள் திருட்டு குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.