கன்னியாகுமரி: கேரளா மாநிலத்தில் கல்லாமையை இல்லாமை ஆக்கியதுடன் ஜாதி கொடுமையில் இருந்து பிற்படுத்தப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட மக்களுக்காக போராடிய ஆன்மீகவாதியும், சமூக சீர்திருத்தவாதியுமான நாராயண குருவின் 169-வது ஜெயந்தி விழா அனுசரிக்கப்பட்டது.
அவரின் நினைவு நாளை முன்னிட்டு ஜோதி ஓட்டம் நடைபெற்ரது. இதில், அவர் தவம் இருந்த மருத்துவாழ் மலையிலிருந்து நாகர்கோவில் வரை நடைபெற்ற ஜோதி ஓட்டத்தில் நூற்றுக்கணக்கான பள்ளி மாணவ மாணவிகள் பங்கேற்றனர். 1856 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 20 ஆம் தேதி கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகில் உள்ள செம்பழந்தி என்ற கிராமத்தில் மாடன் ஆசான் - குட்டி அம்மாள் தம்பதியருக்கு மகனாக பிறந்தவர் நாராயணன்.
இவரது தந்தை, தாய் ஈழவ சமுதாயத்தை சேர்ந்தவர்கள். விவசாயத்தை தொழிலாக கொண்டிருந்தாலும், நாராயணனின் தந்தை சிறிது சமஸ்கிருதம் தெரிந்து இருந்ததால் ராமாயணம் மற்றும் மகாபாரதம் போன்ற கதைகளை கிராம மக்களுக்கு சொல்லி வந்தார். தந்தை சொல்லும் கதைகளை ஆர்வமுடன் கேட்டு வந்த நாராயணன், இளம் வயதில் தந்தை இல்லாத நேரங்களில் அவரை போல் கிராம மக்களுக்கு கதைகளை சொல்லி மகிழ்வித்து வந்தார்.
அப்போது, அந்தக் காலக்கட்டங்களில் இந்தியா முழுவதும் சாதியக் கொடுமை பரவியிருந்த நேரம். கேரளாவிலும் பிற்படுத்தப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கு அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டு வந்த காலகட்டமாகவே இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. அன்றைய காலக்கட்டத்தில் நாராயணகுரு ஈழவர் சமூகத்தில் பிறந்து மிகச் சிறந்த ஆன்மீகவாதியாகவும், சமூக சீர்திருத்தவாதியாகவும் மாறினார்.
கேரள மாநிலம் இந்தியாவிலேயே முழு எழுத்தறிவு பெற்ற மாநிலமாக மாறுவதற்கு தூண்டுகோலாகவும், 'கல்லாமை என்பதை இல்லாமை ஆக்குவோம்' என்ற கொள்கையில் அதிக ஈடுபாடு கொண்டவராகவும் மாறினார். பிரிட்டிஷ் அரசாங்க பணியாளராக பணிபுரிந்த தைக்காடு அய்யாவு என்ற தமிழர் பழக்கத்தின் மூலமாக சிலம்பம், யோகா போன்ற கலைககளை கற்று கொடுக்கும் ஆசானாகவும் இருந்து வந்தார்.
தனது ஆசானான அய்யாவிடம் இருந்து தியானம், யோகா போன்ற கலைகளுடன் தமிழி மொழியிலும் ஆழமான அறிவையும் பெற்றார். திருமந்திரம் போன்ற தமிழ் நூல்களையும் நன்கு கற்று அறிந்தார். 23 வது வயதில் துறவறம் மேற்கண்ட நாராயணன், கன்னியாகுமரி மாவட்டம் பொற்றையடி ஊரின் அருகிலுள்ள மருத்துவாழ் மலையில் தனிமையில் தியானங்கள் செய்து, எட்டு வருடங்கள் வரை இளம் துறவியாக வாழ்ந்து வந்தார்.
இந்த மருத்துவாழ் மலையில் தியானம், யோகா போன்ற கலைகளால் அவருக்குக் கிடைத்த அனுபவங்களை கொண்டு, மலையாள மொழியில் 'ஆத்மோபதேச சதகம்' எனும் நூறு செய்யுள்களை இயற்றினார். தீண்டப்படாத சமூகத்தில் பிறந்தவர்களுக்கு கல்வி மறுக்கப்பட்ட காலகட்டத்தில் மலையாளம், தமிழ், சமஸ்கிருதம் போன்ற மொழிகளில் அதிகப் புலமை பெற்றிருந்தார்.
சன்னியாசியாக திரிந்த நாராயணன், தனது கொள்கைகளை விரும்பும் சிலரை பின்னாளில் தனது சீடர்களாக்கி கொண்டார். அதன் பிறகு நாராயண குருவாக உயர்ந்தார். 1888-ல் திருவனந்தபுரத்திற்கு அருகில் மலைகள் மற்றும் காடுகள் சூழ்ந்திருந்த அருவிப்புரம் என்கின்ற இடத்தில் நெய்யாறு ஓடும் இடத்திற்கு அருகில் ஒரு இடத்தைத் தேர்வு செய்தார்.
அந்த இடத்தில் தனது சீடர்கள் உதவிகளுடன் அந்த ஆற்றில் இருந்து ஒரு கல்லை எடுத்து வந்து, அந்தக் கல்லை சிவலிங்கமாக பிரதிஷ்டை செய்தார். கேரள மாநிலத்தில் தாழ்த்தப்பட்டவர்கள் எனக் கூறப்பட்டு கடவுள் வழிபாடு மறுக்கப்பட்ட காலத்தில், இந்த அருவிப்புரம் சிவன் கோவில் அமைக்கப்பட்டது. இதன் தனிச்சிறப்பாகவும், புரட்சிகரமான செயலாகவும் அமைந்தது.
அதே சமயம் மேல்சாதியினர்களுக்கு இது எரிச்சலை தூண்ட, இந்தக் கோயிலில் தங்கள் தெய்வத்தை எப்படி பிரதிஷ்டை செய்யலாம் என்கின்ற பிரச்சனையையும் எழுப்பினர். ஆனால் நாராயண குரு, கடவுள் என்பது குறிப்பிட்ட ஒரு சமூகத்தினருக்கு மட்டும் சொந்தமானதல்ல என்று சொன்னதுடன் பல போராட்டங்களையும் எதிர்த்துள்ளார்.
இதன் பிறகு காலத்திற்கும் இதனை நினைவுபடுத்தும் வகையில், இந்தக் கோயிலில் சாதி மத பேதமில்லாமல் அனைவரும் வணங்கும் தலம் என்று எழுதி வைக்கவும் செய்தார். நம்பூதிரிகளுக்கு அடுத்த நிலையில் இருந்த நாயர் வகுப்பினர்கள் கூட கோயில்களின் கருவறைக்குள் நுழைய முடியாத நிலை இருந்த அந்த காலகட்டத்தில், நாராயண குரு பல கோயில்களைக் கட்டி ஆலய பிரவேசத்திற்கு புதிய வழி முறையைக் கொண்டு வந்தார்.
கேரளாவில் திருச்சூர், கண்ணூர், அஞ்சுதெங்கு, கோழிக்கோடு போன்ற பல்வேறு இடங்களில் கோயில்களைக் கட்டினார். கர்நாடகாவில் மங்களூர் பகுதியிலும், தமிழகத்தில் நாகர்கோவிலிலும், இலங்கையில் கொழும்பிலும் சில முக்கியமான கோயில்களைக் கட்டி அங்கு சிவன், விஷ்ணு, தேவி போன்ற தெய்வங்களை பிரதிஷ்டை செய்தார்.
இதனைத் தொடர்ந்து 1913 இல் ஆலுவா என்னுமிடத்தில் 'அத்வைத ஆசிரமம்' அமைக்கப்பட்டது. இந்த ஆசிரமத்தின் முக்கிய கொள்கையாக "கடவுளின் கண்களுக்கு அனைத்து மனிதர்களும் சமம்" என்கிற வாசகம் எழுதப்பட்டது. இந்தியாவில் ஆன்மீகத்தில் பல புதுமைகளைக் கொண்டு வந்த சிறந்த இலக்கியப் படைப்பாளியாகவும், தத்துவ ஞானியாகவும் உயர்ந்த ஸ்ரீ நாராயண குரு 1928-ஆம் ஆண்டில் செப்டம்பர் மாதம் 20ம் தேதி இயற்கை எய்தினார்.
இவரின் பெருமையையும், தியாகங்களையும் முன்னிறுத்தி ஆண்டு தோறும் செப்டம்பர் 1 ஆம் தேதி ஜெயந்தி விழாவாக கடைபிடிக்கப்படுகிறது. ஸ்ரீ நாராயண குருவின் 169 ஜெயந்தி விழாவை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் சிறப்பாக கொண்டாடப்பட்டது. நினைவு நாளை முன்னிட்டு தொடர் ஜோதி ஓட்டம் நடத்தப்பட்டது.
இந்தப்போட்டி சுமார் 17 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மருத்துவாழ் மலையில் தொடங்கி நாகர்கோவில் கோட்டார் பகுதியில் நிறைவுபெற்றது. அதன் பின்னர் நாராயண குரு மண்டபத்தில் நடந்த நிகழ்ச்சியில், சமுதாய மக்கள் ஏராளமானவர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இதில் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு, அதிக மதிப்பெண் எடுத்த மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்களும், ஏழை பொதுமக்களுக்கு நல திட்ட உதவிகளும் வழங்கினர்.
இதையும் படிங்க: திருக்கடையூர் கோயிலில் ஜிவி பிரகாஷ் குடும்பத்தினருடன் சாமி தரிசனம்!