காஞ்சிபுரம் அடுத்த மாகரல் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி அப்பாதுரைக்கு கடந்த 10 நாள்களுக்கு முன் கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. இதையடுத்து காஞ்சிபுரத்தில் உள்ள மீனாட்சி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில் நேற்று காலை அவர் தனது மகன்களிடம் உடல்நிலை நன்றாக உள்ளதாகவும், தன்னை வீட்டுக்கு அழைத்துச் செல்லுமாறும் கூறியுள்ளார். இதையடுத்து அவரது மகன்கள் மருத்துவர்களிடம் தனது தந்தையை டிஸ்சார்ஜ் செய்யுமாறு கூறியுள்ளனர். சில மணி நேரத்திலேயே மருத்துவர்கள் அவருக்கு உடல்நிலை மோசமாக உள்ளதாகவும், பிளாஸ்மா வாங்கி வர கூறியுள்ளனர்.
இக்கட்டான சூழ்நிலையில் பிளாஸ்மா வாங்கிவந்து அளிக்கையில், இதைச் செலுத்த இயலாது என மருத்துவர்கள் கைவிரித்தனர். இதையடுத்து அப்பாதுரை சிறிது நேரத்தில் இறந்துவிட்டார். தொடர்ந்து பாக்கி ஒரு லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் செலுத்துமாறு மருத்துவமனை நிர்வாகத்தினர் கூறியுள்ளனர்.
“இதுவரையில் சிகிச்சைக்காக ஏழு லட்சம் ரூபாய் வரையில் பணம் கட்டியும் முறையாக மருத்துவர்கள் சிகிச்சை அளிக்கவில்லை” என அப்பாதுரையின் மகன்கள் குற்றஞ்சாட்டினார். மேலும் அவர்கள் மருத்துவர்களின் செயலைக் கண்டித்து மருத்துவமனை வளாகத்தில் மருத்துவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதைத்தொடர்ந்து காஞ்சிபுரம் தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் சம்பவ இடத்திற்கு வந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டவர்களிடம் நடந்த சம்பவங்கள் குறித்து கேட்டறிந்து மருத்துவமனை நிர்வாகத்திடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். காவல் துறையினரிடம் அப்பாதுரையின் மகன்கள், "நன்றாக இருந்த எங்களது தந்தையின் கை, கால்களைக் கட்டிப்போட்டு தரமற்ற மருத்துவ சிகிச்சை அளித்தனர்.
இம்மருத்துவமனையில் நாள்தோறும் பலர் இறக்கின்றனர். சிகிச்சை அளிக்க போதிய அனுபவம் இல்லாத மருத்துவர்களையே இங்கு பயன்படுத்துகின்றனர்" என்று குற்றஞ்சாட்டினர்.