காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட திமுக சார்பில், திமுக அரசின் ஓராண்டு சாதனை விளக்கக் கூட்டம் மற்றும் திமுக மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கும் விழா காஞ்சிபுரம் திமுக மாவட்ட செயலாளரும், உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினருமான க.சுந்தர் தலைமையில் இன்று நடைபெற்றது. காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் கலைஞர் திடலில் நடைபெற்ற இவ்விழாவில், காஞ்சிபுரம் எம்பி ஜி.செல்வம், காஞ்சிபுரம் எம்எல்ஏ சி.வி.எம்.பி.எழிலரசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலும், திமுக இளைஞரணிச் செயலாளரும், சேப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
இவ்விழாவில் 2,083 திமுக மூத்த முன்னோடிகளுக்கு தலா 15,000 ரூபாய் பொற்கிழிகளையும், சுமார் 400 க்கும் மேற்பட்ட நலிவுற்ற பெண்களுக்கு தையல் இயந்திரங்களும்,12 ஆம் வகுப்பு மற்றும் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் மூன்று இடங்கள் பிடித்த 188 அரசுப்பள்ளி மாணவ மாணவியர்களுக்கு கல்வி ஊக்கத் தொகையும், கரோனா தொற்றால் உயிரிழந்த திமுகவினருக்கு நிதியுதவிகள் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளை உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.
பின்னர் பேசிய உதயநிதி ஸ்டாலின், “என்னை ‘சின்னவன்’ என்றே கூறுங்கள். உங்களுடைய உழைப்பு, அனுபவத்தில் நான் சின்னவன் தான். என்னை செல்லமாக சின்னவன் என்றே கூப்பிடலாம். என்னை ‘சின்னவரே’ என்று கூறினால், பல விமர்சனங்கள் எழுகிறது. பல பேர் வயிற்றெரிச்சல் அடைகிறார்கள். ஆகையால் என்னை நீங்கள் சின்னவன் என்றே கூப்பிடலாம்.
இனிமேல் அதிமுகவை நாம் திட்டவோ, விமர்சிக்கவோ அவசியமே இல்லை. கடந்த சில நாட்களாக, அவர்களே திட்டிக்கொண்டு கல் எறிந்து கொள்கிறார்கள். ஏனென்றால் அதிமுகவிற்கு வரலாறு கிடையாது. நமது திமுக இயக்கத்திற்கு தான் வரலாறு இருக்கின்றது. அந்த வரலாறுக்கு சாட்சியாக, திமுக மூத்த முன்னோடிகளாக நீங்கள் உள்ளீர்கள்.
நீங்கள் இல்லையென்றால் திமுக கிடையாது. எனவே என்னைப் போன்ற இளைஞர்களை, இந்த சின்னவனை மூத்த முன்னோடிகள் எங்களது கைகளைப் பிடித்து என்னையும், என்னை போன்ற இளைஞர்களையும் வழி நடத்திட வேண்டும். நீங்கள் எங்களுக்கு வழி காட்டுங்கள். உங்களது வழிகாட்டுதலோடு நாங்கள் வழி நடக்கிறோம்” என தெரிவித்தார்.
இதையும் படிங்க: ஓபிஎஸ் கடிதம் தொடர்பாக இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை: சபாநாயகர் அப்பாவு