தமிழ்நாடு முதலமைச்சரின் வேண்டுகோளை ஏற்று கரோனா நிவாரண நிதியை பல்வேறு அமைப்புகள் வழங்கிவருகின்றன. காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் சார்பில் மின்விசிறிகள், குளிர்சாதனப் பெட்டிகள் உள்ளிட்டவை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம், சட்டப்பேரவை உறுப்பினர் சி.வி.எம்.பி. எழிலரசன் ஆகியோர் முன்னிலையில் தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் மாநிலத் தலைவர் கு. தியாகராஜன் மருத்துவமனை அலுவலர்களிடம் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்க மாவட்டச் செயலாளர் சேகர், மாவட்டத் தலைவர் பாலாஜி, மாவட்ட பொருளாளர் பாலகிருஷ்ணன், மாவட்ட மகளிரணிச் செயலாளர் வந்தனா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் கு. தியாகராஜன் பேசுகையில், "10 ஆண்டுகளாக ஆசிரியர் நியமனங்கள் என்பது முறையாக நடைபெறாத சூழல் இருந்துவந்தது. எத்தனையோ காலிப்பணியிடங்கள் இருந்தாலும் ஆசிரியர் பயிற்சி முடித்த இளைஞர்கள் வேலைவாய்ப்பு பறிக்கப்பட்டது.
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பல ஆண்டு கனவுகளை எல்லாம் தீர்த்துவைப்பார் என்று லட்சக்கணக்கான ஆசிரியர் பயிற்சி முடித்த இளைஞர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.
அவர்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கக்கூடிய செய்திபோலதான் இன்றைக்கு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அறிவிப்பு இருக்கிறது. உண்மையிலேயே ஆசிரியர் தேர்வு வாரியம் கலைக்கப்படாது என்று அறிவித்திருக்கும் அறிவிப்பை தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் வரவேற்கிறது.
சமக்ரா சிக்ஷா அபியான் ஆய்வக உபகரணங்கள் அளிப்பதில் முறைகேடுகள் நடந்திருக்கின்றன. தப்பு செய்தவர் யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும்" என்றார்.
இதையும் படிங்க: கரோனா 3ஆம் அலை: வேலூர் ஆட்சியரின் 34 பக்க கடிதம்