காஞ்சிபுரம் கீரை மண்டபம் அருகே வசிக்கும் நடராஜ் என்பவரின் மகன் கணேஷ் குமார்(19). கல்லூரியில் படித்து வந்த கணேஷ் குமார் கடந்த ஞாயிற்றுக்கிழமை கிரிக்கெட் விளையாடுவதற்காக காஞ்சிபுரம் பச்சையப்பன் அரசு மேல்நிலைப்பள்ளி மைதானத்திற்கு சென்றுள்ளார்.
காலை முதல் மாலை வரை விளையாடிக் கொண்டிருந்த கணேஷ் குமார் விளையாட்டு முடிந்து தண்ணீர் குடிக்க சென்றபோது திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. சுதாரித்துக் கொண்ட மாணவன் 108 அவசர ஆம்புலன்ஸ் பிரிவுக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
அந்த நேரத்தில் அப்பகுதியில் யாரும் இல்லாத காரணத்தால் நேரடியாக 108 ஆம்புலன்ஸ்-க்கு தொடர்பு கொண்டு தனக்கு மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளதாகவும் உடனடியாக மருத்துவமனைக்கு தன்னை கொண்டு செல்லும்படி தகவல் அளித்துள்ளார்.
ஆனால் 108 சேவை ஊழியர்கள் கணேஷ் குமாரின் தகவலை ஏற்க மறுத்து அருகே உள்ள நபரிடம் தொலைபேசியை கொடுக்கும்படி கூறியுள்ளனர். உயிருக்கு போராடிக்கொண்டிருந்த மாணவர் 108 ஆம்புலன்ஸ் வராத காரணத்தால் சிறிது நேரத்தில் மூச்சுத்திணறல் அதிகரித்து சம்பவம் இடத்திலேயே மயங்கியுள்ளார்.
சிலமணி நேரம் கழித்து அப்பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் மயங்கிய நிலையிலிருந்த மாணவரை கண்டதும் தொலைபேசி மூலம் பெற்றோருக்கு தகவல் கொடுத்துள்ளார், அவர்கள் வந்து மருத்துமனைக்கு கொண்டுசென்றபோது அவரை பரிசோதித்த மருத்துவர் அவர் முன்பே இறந்துவிட்டதாக கூறியுள்ளார்.
மாணவன் இறுதி சடங்கு முடிந்த பிறகு பெற்றோர் அவரின் செல்போனை பார்த்த பொழுது அவர் உயிருக்கு போராடிய நிலையில் 108 ஆம்புலன்ஸை தொடர்பு கொண்டது தெரியவந்தது. தற்போது இந்த ஆடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.