காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் மாநில சிறுபான்மையினர் ஆணையத் தலைவர் பீட்டர் அல்போன்ஸ் தலைமையில் சிறுபான்மையினர் நல கருத்துக் கேட்பு மற்றும் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் சிறுபான்மையின மக்களின் மேம்பாட்டிற்காக மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும், நலத்திட்டங்கள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டு கருத்துகள் கேட்டறியப்பட்டன.
ஏமாற்றிய அதிமுக
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய பீட்டர் அல்போன்ஸ், "புதிதாகப் பொறுப்பேற்று 100 நாள்கள் நிறைவு செய்த ஸ்டாலின் அரசுக்கு நன்றி. சிறுபான்மையின மக்களுக்கு, கடந்த காலத்தில் அதிமுக அரசு எதுவுமே முறையாக செய்யாமல் ஏமாற்றியது.
ஆனால், திமுக அரசு 100 நாள்களில் சிறுபான்மையினர் ஆணையத்திற்கு செயலாளர், உறுப்பினர்களை ஏற்படுத்தி பல திட்டங்களைச் செய்து வருகிறது. கடனுதவி, உதவித்தொகை போன்றவைகூட சென்ற ஆட்சிக் காலத்தில் முறையாக வழங்கப்படவில்லை.
சிறுபான்மை மக்களுக்கான திமுக ஆட்சி
சிறுபான்மையினர், வழிபாட்டுத் தலங்களில் வழிபடுவதற்கு உரிய நிம்மதியான அமைதியான சூழல் இல்லை. அடக்கம் செய்வதற்கான வசதிகள்கூட இல்லாத நிலைதான் இருந்தது. இவற்றையெல்லாம் கண்டறிந்து சிறுபான்மை மக்களுக்கு உதவும் வகையில் இவ்வாட்சி செயல்படுகிறது.
நலத்திட்ட உதவிகளையும் நிவாரணங்களும் அனைவருக்கும் கிடைக்கும் வகையில் வகை செய்வோம். சிறுபான்மையின மக்கள் தங்களுடைய வழிபாட்டு உரிமைகளை பாதுகாத்துக் கொள்வதற்கான எல்லா பாதுகாப்பு வசதிகளையும் தமிழ்நாடு அரசு ஏற்படுத்தும்" என்றார்.
இந்நிகழ்வின்போது ஆணையத்தின் உறுப்பினர் செயலர் துரை.ரவிச்சந்திரன், மாவட்ட ஆட்சியர் டாக்டர் மா.ஆர்த்தி, உத்திரமேரூர் சட்டப்பேரவை உறுப்பினர் க.சுந்தர், காஞ்சிபுரம் சட்டப்பேரவை உறுப்பினர் சிவிஎம்பி எழிலரசன், ஸ்ரீபெரும்புதூர் சட்டப்பேரவை உறுப்பினர் கு.செல்வப் பெருந்தகை உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் தடுப்பூசி தட்டுப்பாடு இல்லை - அமைச்சர் மா.சுப்பிரமணியன்