புதுச்சேரி, கடலூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் கடல் சீற்றமாக காணப்படுவதால் மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதனையடுத்து மூன்று நாட்களாக அப்பகுதி மக்கள் மீன் பிடிப்பதற்கு செல்லாததால் அவர்களின் வாழ்வாதாரம் முழுமையாக பாதிப்படைந்துள்ளது. கடலில் வீசப்படும் காற்றானது 10 கிலோ மீட்டர் வேகத்துக்கும் குறைவாக வீசினால் மட்டுமே மீனவர்கள் கடலுக்குள் மீன் பிடிக்கச் செல்ல முடியும்.
ஆனால் தற்போது வழக்கத்திற்கு மாறாக 54 முதல் 60 கிலோமீட்டர் வரை காற்று வேகமாக வீசுவதால் மீனவர்கள் கடலுக்குள் மீன் பிடிக்கச் செல்லவில்லை. இந்த நிலை நீடித்தால் அவர்களது வாழ்வதாரம் என்னவாகும் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.
இதையடுத்து, மூன்று நாட்களாக மீன்பிடிக்க கடலுக்கு செல்லாததால் தங்களுக்கு ஏற்பட்ட நட்டத்திற்கு தமிழ்நாடு அரசு தக்க இழப்பீடு வழங்க வேண்டும் என அப்பகுதி மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.