காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் பகுதியில் இரும்பு பைப்புகள், கார் உதிரி பாகங்கள் தயாரிக்கும் நிறுவனம் இயங்கிவருகின்றது. சுமார் 500-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரிந்துவரும் இந்த நிறுவனத்தில் முதன்மை நிதி அலுவலராக சிவஸ்ரீராமுலு என்பவர் பணிபுரிந்துவந்தார்.
இந்நிலையில், நிறுவன கணக்கில் காண்பிக்காமல் சுமார் ஐந்து கோடியே 86 லட்சம் ரூபாய் பணத்தை சிவஸ்ரீராமுலு, முறைகேடு செய்ததாக அந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் அருள் என்பவர் காஞ்சிபுரம் மாவட்ட குற்றப்பிரிவு காவல் துறையினரிடம் புகார் அளித்தார்.
அந்தப் புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து மாவட்ட குற்றப்பிரிவு காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்திவந்தனர். அதில் முனி வேல், ஆர்எஸ். இந்திரா, பிரித்திவி, வெங்கடேசன், சீனிவாசன் கலைவாணி கேட்டரிங் சர்வீஸ் போன்ற வாடிக்கையாளர்களுக்கு அவர்களின் வங்கிக் கணக்கிற்குப் பணத்தை அனுப்பிவிட்டு நிறுவனத்துக்குத் தெரியாமல் அவர்களிடம் பொய்யான காரணங்களைக் கூறி பணத்தை பெற்று சுமார் ஐந்து கோடியே 86 லட்ச ரூபாய் மோசடி செய்தது உறுதிப்படுத்தப்பட்டது.
அதன்பேரில் காஞ்சிபுரம் மாவட்ட குற்றப்பிரிவு ஆய்வாளர் சங்கர் தலைமையில் புதுச்சேரியில் பதுங்கிருந்த முதன்மை நிதி அலுவலர் சிவசீராமுலுவை கைதுசெய்து நீதிமன்றத்தில் முன்னிறுத்தி சிறையில் அடைத்தனர்.