காஞ்சிபுரம்: சென்னையிலிருந்து பெங்களூரு வரையிலான நான்கு வழி சாலையை ஆறு வழிச் சாலையாக அகலப்படுத்தும் பணியை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் கடந்த ஐந்தாண்டுகளாக மேற்கொண்டு வருகிறது. இதற்காக காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதுார் தாலுகாவில் நிலம் எடுக்கும் பணிகள் சில ஆண்டுகளாக நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் ஸ்ரீபெரும்புதுார் தாலுகா பீமன்தாங்கல் கிராமத்தில் தேசிய நெடுஞ்சாலைக்காக எடுக்கப்பட்ட நிலங்களுக்கு இழப்பீடாக வழங்கப்பட்ட 200 கோடி ரூபாய் முறைகேடாக வழங்கப்பட்டு உள்ளதாக தற்போது புகார் எழுந்துள்ளது.
சுங்கச்சாவடி அருகேயுள்ள 70 பேரின் நிலங்களுக்கு 200 கோடி ரூபாய் இழப்பீடு வழங்கப்பட்டுள்ள நிலையில், இழப்பீடு வழங்கப்பட்ட நிலத்திற்கு பட்டா இல்லை என தமிழ்நாடு அரசின் நில நிர்வாக ஆணையருக்கு கடந்தாண்டு தகவல் தெரிய வந்தது. இதனால் காஞ்சிபுரம் மாவட்ட வருவாய் துறையினர் இதுபற்றி விசாரிக்க உத்தரவிடப்பட்டது.
அதன்படி வருவாய் துறையினர் நடத்திய விசாரணையில், அந்த நிலங்கள் யு.டி.ஆர் என்ற அடிப்படை ஆவணங்களில் அனாதீனம், மேய்க்கால் புறம்போக்கு நிலம் என்பதும், முறைகேடாக இழப்பீடு வழங்கப்பட்டதும், ஒரு நிலத்திற்கு இரு முறை இழப்பீடு வழங்கப்பட்டதும் தெரியவந்தது. பட்டா இல்லாத அரசு நிலங்களுக்கு, 200 கோடி ரூபாய்க்கு மேலாக, இழப்பீடு வழங்கிய தேசிய நெடுஞ்சாலைக்கான நில எடுப்பு சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலர் நர்மதா மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ளது.
மேலும் ஓய்வு பெற்ற தாசில்தார் ராதாகிருஷ்ணன், செட்டில்மென்ட் அலுவலர் சண்முகம், தனி தாசில்தார் தேன்மொழி, நில அளவையர் வரதராஜன் ஆகிய அலுவலர்கள் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல் பட்டாதாரர்களான அசோக்மேத்தா, செல்வம், விஜயராகவன் மீதும், வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தேசிய நெடுஞ்சாலை விவகாரம் என்பதால் இந்த விவகாரத்தை சிபிஐ விசாரிக்க நில நிர்வாக ஆணையர் பரிந்துரை செய்துள்ளார்.
தேசிய நெடுஞ்சாலைக்கு ஏற்பட்ட இழப்பு தொகையான 200 கோடி ரூபாயை வசூலிக்கவும், 70 பேர் மீது வழக்குப்பதிவு செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இழப்பீடு பெற்ற நபர்களுக்கு நில நிர்வாக ஆணையர் அலுவலகம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: மதுரை எய்ம்ஸ் பணிகளை விரைவாகத் தொடங்க பிரதமருக்கு மு.க. ஸ்டாலின் கடிதம்