இது குறித்து உத்திரமேரூர் வரலாற்று ஆய்வு மையத் தலைவர் கொற்றவைஆதன் கூறுகையில், “ லகுலம் என்றால் தடி. ஈசம் என்றால் ஈஸ்வரன் தடியைக் கொண்டு சைவ சமயத்தை பரப்ப சிவபெருமானே மனித உருவில் 28 ஆது அவதாரமாக உருவெடுத்ததே லகுலீசர் என்பதாகும். சைவ சமயத்தின் முக்கிய பிரிவான பாசுபதத்திலிருந்து இந்த லகுலீச பாசுபதம் தோன்றியது.
கிபி இரண்டாம் நூற்றாண்டில் குஜராத் மாநிலத்தில் வதோதரா மாவட்டத்தில் காரோஹன் என்னுமிடத்தில் தோன்றி தமிழ்நாட்டில் மூன்றாம் நூற்றாண்டிற்குப் பிறகு வேர்விட தொடங்கியது. இதுகுறித்து சங்க காலத்திலேயே குறிப்புகள் காண கிடைக்கின்றன. இதைப் பின்பற்றுபவர்கள் விபூதியை உடல் முழுவதும் பூசிக்கொண்டு சாம்பலில் நடனமாடி சாம்பலில் படுத்துறங்கி மாலைகளை அணிந்து கொண்டு லகுலீச பாசுபதம் சார்ந்த கோயில்களில் மட்டுமே இரவில் தங்குவார்கள்.
பல்லவர் காலத்தில் உச்சத்திலிருந்த இந்த பாசுபதலகுலீசம் பின்பு படிப்படியாக வலுவிழக்க தொடங்கியது. சோழர்கால அரசவைகளில் இவர்கள் ராஜகுருவாக செல்வாக்குடன் இருந்துள்ளார்கள். பரந்து விரிந்த தமிழ்நாட்டில் இதுவரை சுமார் 20க்கும் மேற்பட்ட லகுலீசர் உருவங்கள் மட்டுமே அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. காஞ்சிபுரம் மாவட்டத்திலும் இதுதான் முதல் சிலை.
நாங்கள் கண்டறிந்த இந்த சிலையானது 95 சென்டிமீட்டர் உயரமும் 65 சென்டிமீட்டர் அகலமும் கொண்டு ஆடையின்றி சம்மணமிட்டு அமர்ந்த நிலையில் காணப்படுகிறது. இதன் தலையில் ஜடா பாரமும் இரு காதுகளில் அழகிய குண்டலங்களும், கழுத்தில்
ஒட்டிய அணிகலனாக சவடியும், வலக்கையில் தண்டும் என காணப்படுகிறது.
இடது தோள்பட்டை மேலே படம் எடுத்த நிலையில் நாகத்தின் சிற்பம் இடம்பெற்றுள்ளது. சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு வீட்டிற்கான அஸ்திவாரம் தோண்டும்போது இது கிடைத்துள்ளது. பூமிக்கு அடியில் பல ஆண்டுகள் இருந்துள்ளதால் சற்று சிதைந்த நிலையில் காணப்படுகிறது. இதை ஊர் மக்கள் சிலர் அம்புரிஸ்வரர் என்கின்றனர்.
ஆனால் இது லகுலீசர் சிலையாகும். தமிழ்நாட்டில் லகுலீச பாசுபத ஆய்வாளர்களும் தொல்லியல் அறிஞர்களுமான மங்கை வீரராகவன் மற்றும் சுகவன முருகன் ஆகியோர் இதை லகுலீசர் என்பதையும் ஏழாம் நூற்றாண்டை சார்ந்த பல்லவர்கால சிலை என்பதையும் உறுதிப்படுத்தியுள்ளார்கள்” என்றார்.