இதுதொடர்பாக காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் இன்று (பிப்.8) வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், கடந்த 2017, பிப்.14ஆம் தேதி செத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்புக்கு எதிரான மேல்முறையீட்டு வழக்கில் சிறைதண்டனை விதிக்கப்பட்ட சசிகலாவின் உறவினர்களான இளவரசி, சுதாகரன் ஆகியோரின் சொத்துக்களைப் பறிமுதல் செய்து அரசுடமை ஆக்குமாறு உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்திருந்தது.
அதன்படி, காஞ்சிபுரம் மாவட்டத்தில், இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு சொந்தமாக ஊத்துக்காடு கிராமம், வாலஜாபாத் பகுதியிலுள்ள மெடோ ஆக்ரோ பார்மஸ் (பி) லிட் சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டு அரசுடமை ஆக்கப்பட்டுள்ளது. இந்த சொத்துக்களில் இருந்து பெறப்படும் வருவாய் அனைத்தும் தமிழ்நாடு அரசுக்கு பாத்தியப்பட்டது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் வட்டம் பகுதியில் அமைந்திருக்கும் சிக்னோரா எண்டர்பிரைசஸ் பிரைவேட் லிமிடட் சொத்துகள் அனைத்தும் பறிமுதல் செய்யப்பட்டு அரசுடமை ஆக்கப்பட்டிருப்பதாக அம்மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2017ஆம் சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு நான்கு ஆண்டு சிறைதண்டனையும், ரூ.10 கோடி அபராதமும் அளித்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
தற்போது தண்டனை காலம் முடிந்து, அபராதமும் செலுத்திய நிலையில் சசிகலா, இளவரசி ஆகியோர் சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டனர். சுதாகரன் அபராதத் தொகை இன்னும் செலுத்தாத நிலையில், தண்டனை காலம் முடிந்தம் சிறையிலிருந்து விடுவிக்கப்படாமல் உள்ளார்.
இளவரசி விடுதலையாகயுள்ள நிலையில், நீதிமன்ற தீர்ப்பின்படி அவருக்கு சொந்தமான சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இதையும் படிங்க: சசிகலாவை வரவேற்று அமமுகவினர் வைத்த பேனர்கள் அகற்றம்