காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஒன்றியத்திற்கு உட்பட்ட ஊத்துக்காடு பகுதியில் ஊரக வளர்ச்சி பணிகளை தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இதன் பின் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் உள்ள மக்கள் நல்லுரவு கூட்டரங்கில் தமிழ்நாடு வாழ்வாதார மேம்பாட்டு திட்டத்தின் கீழ் மகளிர் சுய உதவி குழுக்கள் அமைக்கப்பட்ட கைவினைப்பொருட்கள் கண்காட்சியை பார்வையிட்டார்.
மேலும், மகளிர் சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்த 292 பயனாளிகளுக்கு 12 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை வழங்கிய அவர் காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி திட்ட பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டத்தில் கலந்துகொண்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை நடைமுறைப்படுத்த உள்ளாட்சித் தேர்தல் நடத்துவதற்கான அனைத்து பணிகளிலும் தமிழ்நாடு அரசும், மாநில தேர்தல் ஆணையமும் ஈடுபட்டுவருகிறது. உள்ளாட்சித் தேர்தலை தள்ளிப்போட வேண்டும் என்ற எண்ணம் அரசுக்கு இல்லை.
ஆண்டுதோறும் பொருட்கள் உயர்வுக்கு ஏற்றவாறு பொதுப்பணித் துறையினர் பொருட்களின் மதிப்பை நிர்ணயம் செய்வார்கள் இனிவரும் காலங்களில் கட்டுமான பொருள்கள் உயர்வு இருக்காது. 100 நாள் வேலை திட்டம் 150 நாட்களாக மாற்றம் செய்யப்படும் என தேர்தல் அறிக்கையில் தெரிவித்தது போல் எதிர்காலத்தில் நிச்சயம் அது நிறைவேற்றப்படும்” என்றார்.