காஞ்சிபுரம்: ஸ்ரீபெரும்புதூர் அடுத்த மேவளூர்குப்பம், சுபஸ்ரீ நகரைச் சேர்ந்தவர் குமரன். இவர் ஷேர் ஆட்டோ ஓட்டுனராக தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி மஞ்சுளா(49). இவர் சில நாட்களாக சிறுநீர் வெளியேறாமல் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால் கடந்த மே மாதம் 5 ஆம் தேதி அன்று ஸ்ரீபெரும்புதூர் அருகே பென்னலூரில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கு, சிகிச்சைக்காக மஞ்சுளாவை அவரது கணவர் குமரன் அழைத்துச் சென்றுள்ளார்.
அங்கே மஞ்சுளாவை பரிசோதித்த மருத்துவமனையின் மருத்துவர்கள், மஞ்சுளாவுக்கு கர்ப்பப்பையில் கட்டி இருப்பதால் சிறுநீரகப் பிரச்சினை உள்ளது எனவும், எனவே கர்ப்பப்பையை முற்றிலுமாக அகற்ற வேண்டும் என்றும் கூறியுள்ளனர். இதற்கு மஞ்சுளாவும், குமரனும் சம்மதம் தெரிவிக்கவே மருத்துவர்கள் சிகிச்சை அளித்து மஞ்சுளாவின் கர்ப்பப்பையை அகற்றியதாக கூறப்படுகிறது.
ஆனால் அதிர்ச்சி அளிக்கும் விதமாக கர்ப்பப்பையை அகற்றிய உடன் சிறுநீர் நிற்காமல் வந்து கொண்டே இருந்துள்ளது. இதனால் அதிர்ந்த மஞ்சுளா மருத்துவர்களிடம் இது பற்றி கூற, அறுவை சிகிச்சை செய்யும்பொழுது நூற்றுக்கு இரண்டு பேருக்கு இப்படி தவறு நடக்கும். அதற்காக மீண்டும் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் எனக் கூறியதாக தெரிவிக்கின்றனர்.
ஆனால் கர்ப்பப்பையை அகற்ற நடந்த அந்த அறுவை சிகிச்சையின் போது, தவறுதலாக சிறுநீரகக் குழாயை மருத்துவர்கள் துண்டித்தது தெரியவந்துள்ளது. இதனால் நொந்து போன மஞ்சுளா இரண்டாவது முறையும் அறுவை சிகிச்சை செய்து கொண்டுள்ளார். ஆனால் அந்த அறுவை சிகிச்சை செய்தும் சிறுநீர் 24 மணி நேரமும் நிற்காமல் வந்து கொண்டே இருந்துள்ளது.
மீண்டும் அந்த மருத்துவமனைக்குச் சென்று உள் நோயாளியாக அனுமதிக்கப்பட்டு மருத்துவர்களிடம் இது குறித்து விளக்கம் கேட்டுள்ளனர் மஞ்சுளா தம்பதியர். அதற்கு மருத்துவமனை நிர்வாகம் 'நீங்கள் வீட்டுக்குச் செல்லுங்கள். சில நாட்களில் இந்த பிரச்சினை சரியாகிவிடும் என்று கூறி, கடந்த ஜூலை 12 ஆம் தேதி அன்று வலுக்கட்டாயமாக மருத்துவமனையிலிருந்து வெளியேற்றியுள்ளனர்.
ஆனாலும் அவர்கள் கூறியபடி வீட்டுக்குச் சென்று ஒரு மாதம் ஆகியும் 24 மணி நேரமும் சிறுநீர் வெளியேறுவதால் மஞ்சுளா கடும் அவதிக்குள்ளாகி வந்துள்ளார். தற்போது வீடு முழுவதும் சிறுநீர் துர்நாற்றம் வீசி வருவதால், குமரன் தம்பதி குடியிருக்கும் வீட்டின் உரிமையாளர் வீட்டை காலி செய்ய வற்புறுத்தி வருவதாகக் கூறப்படுகிறது.
இதனால் எங்கே செல்வது என்று தெரியாமல் தவித்து வருகின்றனர் மஞ்சுளா குடும்பத்தினர். இதுகுறித்து மறுபடியும் அதே மருத்துவமனைக்குச் சென்று கேட்ட போது, 'நீங்கள் வேறு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்றுக் கொள்ளுங்கள்' எனக் கூறி கையை விரித்து விட்டனர் என கூறுகின்றனர். இதனால் அந்தக் குடும்பம் கடும் மன உளைச்சல் அடைந்துள்ளது.
அரசு இந்த விவகாரத்தில் கவனம் செலுத்தி தவறான சிகிச்சை அளித்த அந்த தனியார் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், மீண்டும் சிகிச்சை பெறுவதற்கு பணம் இல்லாமல் அவதிப்படுவதால், அரசு தங்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்பதே இந்த தம்பதியின் உருக்கமான வேண்டுகோள் ஆகும்.
இதையும் படிங்க: ஆந்திராவில் பேருந்து கவிழ்ந்து 10 பேர் படுகாயம்!