காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் உள்ள வசந்த மண்டபத்தில் 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை அத்தி வரதர் வைபவம் நடைபெற்று வந்தது. ஜூன் 1ஆம் தேதி முதல் தொடங்கிய அத்தி வரதர் தரிசனம் ஜூலை 30ஆம் தேதி வரை படுத்த நிலையில் தரிசனம் அளித்தார். ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் நின்ற நிலையில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். 47 நாட்கள் நடைபெற்ற வைபவத்தில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அலங்காரத்தில் அத்திவரதர் காட்சியளித்தார். கடைசி நாளான வெள்ளிக்கிழமையில் அத்திவரதர் புஷ்பங்கி அலங்காரத்தில் காட்சியளித்து நிறைவு பெற்றார்.
கடைசி நாளையொட்டி பக்தர்கள் ஐந்து கிலோ மீட்டர் தூரம் நின்று அத்தி வரதரை தரிசித்து சென்றனர். இந்நிலையில், அத்திவரதர் வைக்கக்கூடிய குளத்தின் பள்ளி அறையில் மாவட்ட ஆட்சியர் பொன்னையா ஆய்வு செய்தார். இதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், அத்தி வரதர் தரிசனம் வெள்ளிக்கிழமையுடன் நிறைவு பெற்றது. இதுவரை ஒரு கோடி பக்தர்கள் அத்தி வரதரை தரிசித்துள்ளனர். சனிக்கிழமை காவல்துறையின் பாதுகாப்புடன் பத்திரமாக திருக்குளத்தில் அத்தி வரதர் வைப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது என்று தெரிவித்தார்.
பின்னர் பேசிய அவர், இந்த 47 நாட்களும் சிறப்பாக செயல்பட்ட காவல்துறையினர், வருவாய்த்துறையினர், ஊழியர்கள், தன்னார்வ தொண்டர்கள், காஞ்சிபுரம் மக்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அத்தி வரதர் தரிசனம் தொடக்கத்தில் ஒரு லட்சம் மக்கள் வந்து பார்ப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நாளுக்கு நாள் படிப்படியாக உயர்ந்து 2 லட்சம் முதல் 3 லட்சம் பேர் வரை தரிசித்து சென்றனர். மக்கள் வருகை நாளுக்கு நாள் அதிகரித்ததால் பதினான்காயிரம் காவல் துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர் என்று தெரிவித்தார்.
இதுவரை ஏறக்குறைய ஆயிரத்து 700 சுகாதாரப் பணியாளர்கள் சிறப்பாகப் பணியாற்றினார்கள், பக்தர்களுக்கு உதவ காவல் உதவி மையம், மருத்துவ சேவை, தீயணைப்புத் துறையினரின் பாதுகாப்பு முன்னேற்பாடுகள் உள்ளிட்டவைகள் சிறப்பாக அமைக்கப்பட்டன. பொதுப்பணித்துறை பேரூராட்சி, நகராட்சித் துறை உள்ளிட்ட அனைத்துப் பணியாளர்களின் பங்களிப்பு வெகு சிறப்பாக இருந்தது என அவர் கூறினார்.