காஞ்சிபுரம்: கோயில் நகரமான காஞ்சிபுரம் மாநகரில் மாண்டுக்கணீஸ்வரர் கோயில் தெரு பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக போலீசருக்கு தகவல் கிடைத்தது. அங்கு சென்ற போலீசார், காஞ்சிபுரம் மாநகராட்சி அலுவலகத்தில் ஒப்பந்த ஊழியராக பணியாற்றிவரும் சிவசங்கரன் என்பவரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர் முன்னுக்கு பின் முரணாக பேசியதையடுத்து அவரிடம் போலீசார் நடத்திய கிடுக்கு பிடி சோதனையில் 10 கிராம் எடை கொண்ட 10 கஞ்சா போட்டலங்கள் இருப்பது தெரியவந்ததை அடுத்து பறிமுதல் செய்யப்பட்டது.
இதனையடுத்து சிவசங்கரனை சிவகாஞ்சி காவல் நிலையம் அழைத்துச் சென்று அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். மாண்டுகனீஸ்வரர் கோயில் தெருவில் ஒரு குடியிருப்பு வீட்டினில், சென்னையை சேர்ந்த புகழேந்தி மற்றும் அவனது நண்பர்களுடன் தங்கி இருந்து அங்கிருந்து கஞ்சா சப்ளை செய்து வந்தது தெரிய வந்தது.
அதனையடுத்து அங்கு போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் அங்கு நாட்டு வெடிகுண்டுகள் மற்றும் அதனை தயாரிக்கும் மூலப் பொருட்களும், இரண்டு பட்டாக்கத்திகளும், ஒரு கிலோ கஞ்சா பொட்டலங்களும் இருந்துள்ளது.
இதன் பின் நாட்டு வெடி குண்டுகளை நேற்று போலீசார் முன்னிலையில் வெடிகுண்டு நிபுணர்கள் அதனை பாதுகாப்பாக எடுத்துச்சென்றனர். மேலும் இரண்டு பட்டாக்கத்திகளும், ஒரு கிலோ கஞ்சா பொட்டலங்களும்,வெடிகுண்டுகள் தயாரிக்க தேவையான மூலப்பொருட்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக சிவகாஞ்சி போலீசார் வழக்கு பதிவு செய்து நேற்று சிவசங்கரனை கைது செய்தனர். இவ்வழக்கு தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதில் தொடர்புடைய குற்றவாளிகளை உடனடியாக பிடித்து கைது செய்திட காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர்.எம்.சுதாகர் உத்தரவிட்டார். இதற்கென தனிப்படைகள் அமைக்கப்பட்டன. தனிப்படை போலீசார் குற்றவாளிகளை தேடி வந்த நிலையில், சென்னை வியாசர்பாடியை சேர்ந்த புகழேந்தி (21), அவனது நண்பர்களான திருத்தணியை சேர்ந்த ஜெயகுமார் (23), சோமேஸ் (21), லோகேஸ் (22) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர். போலீசாரின் இந்த விசாரணையில், பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய ஆர்.கே என்பவனை சிறையிலிருந்து வெளியில் வந்ததும் தீர்த்துக்கட்ட நாட்டு வெடிகுண்டுகள் தயாரித்ததும், மேலும் சென்னையை சேர்ந்த சிலரை கொல்லவும் சதி திட்டம் தீட்டி குறி வைத்ததாகவும் அவர்கள் தெரிவித்ததாக காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது.
இதனையடுத்து போலீசாரால் கைது செய்யப்பட்ட ஐந்து பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவ்வழக்கில் மேலும் இருவரையும் போலீசார் பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இவ்வழக்கில் முக்கிய குற்றவாளியான பரிவட்டம் விக்கி (எ) விக்கி மற்றும் அவனது கூட்டாளிகள் சிலரை தேடும் பணியிலும் காவல்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். 24 மணி நேரத்திற்குள்ளாக இவ்வழக்கு தொடர்பாக 5 பேரை போலீசார் கைது செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: Audio Leak... காவலருக்கு கொலை மிரட்டல் விடுத்த இளைஞர்