காஞ்சிபுரம்: நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சியில் மொத்தமுள்ள 15 வார்டுகளில் திமுக 6, காங்கிரஸ் 1, அதிமுக 3, சுயேச்சைகள் 4 மற்றும் பாமக 1 வார்டுகளில் வெற்றி பெற்றன.
ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சி நகர்மன்றத் தலைவர் பதவியை திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு, திமுக தலைமைக் கழகம் ஒதுக்கியது. இதையடுத்து, பேரூராட்சித் தலைவர் பதவிக்கு ஸ்ரீபெரும்புதூர் நகர காங்கிரஸ் கட்சித் தலைவர் அருள்ராஜ் மனைவி செல்வமேரி போட்டியிட்டார்.
4 வாக்குகள் பெற்று தோல்வி
பேரூராட்சித்தலைவர் பதவி காங்கிரஸுக்கு ஒதுக்கப்பட்டதால் அதிருப்தி அடைந்து திமுகவினர், மார்ச் 4ஆம் தேதி நடந்த மறைமுகத் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் செல்வமேரிக்கு எதிராக திமுக நகரச் செயலாளர் சதீஸ்குமாரின் மனைவி சாந்தி போட்டியிட்டு 11 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். செல்வமேரி 4 வாக்குகள் மட்டுமே பெற்று தோல்வி அடைந்தார்.
இதேபோல் தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் கூட்டணி கட்சிக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் திமுகவினர் போட்டியிட்டு வெற்றி பெற்றனர். இதுகுறித்து கூட்டணி கட்சித்தலைவர்கள் திமுக தலைவர் ஸ்டாலினிடம் அதிருப்தி தெரிவித்தனர். இதையடுத்து, கூட்டணி கட்சிக்கு எதிராக போட்டியிட்டு வென்ற திமுகவினர் உடனடியாகப் பொறுப்பை விட்டு விலக வேண்டும் என ஸ்டாலின் உத்தரவிட்டார்.
10 நிமிடங்கள் தியானம்
இந்நிலையில், ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சி நகர்மன்றத் தலைவர் பதவியிலிருந்து திமுகவைச் சேர்ந்த சாந்தி இன்னும் ராஜினாமா செய்யாததைக் கண்டித்து, திமுக தலைமை கூறியது போல் கூட்டணி தர்மத்தைப் பாதுகாக்க உடனடியாக பதவி விலக வலியுறுத்தி ஸ்ரீபெரும்புதூர் சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள ராஜிவ் காந்தி நினைவிடத்தில் அருள்ராஜ் தலைமையில் பேரூராட்சி காங்கிரஸ் உறுப்பினர் செல்வமேரி உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியினர் 10 நிமிடங்கள் தியானத்தில் ஈடுபட்டனர்.
அதன்பிறகு ராஜிவ் காந்தி நினைவிடத்தின் நுழைவு வாயிலின் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பாதுகாப்புப் பணிக்காக அங்கு காவல்துறையினர் குவிக்கப்பட்டனர்.
மேலும் இதுதொடர்பாக திமுக ஸ்ரீபெரும்புதூர் நகரச்செயலாளர் சதீஷ்குமாரை திமுகவினர் தொடர்புகொண்டு கேட்ட போது, தேர்தல் சமயத்தில் மிகுந்த மன உளைச்சல் ஏற்பட்டதால் தற்போது உடல் சோர்வு ஏற்பட்டு உடல்நிலை சரியில்லாமல் உள்ளதாவும், உடல்நிலை சரியான பிறகு இது குறித்து பேசுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: தேசிய பங்குச் சந்தை முறைகேடு: சித்ரா ராமகிருஷ்ணனுக்கு 7 நாள் காவல்