காஞ்சிபுரம்: தமிழகத்தின் சிறப்பு வாய்ந்த தொன்மையான நகரங்களில் காஞ்சிபுரம் முக்கியமான நகரம் ஆகும். காமாட்சி அம்மன் ஆலயம், அத்திவரதர் என்றழைக்கப்படும் வரதராஜப் பெருமாள் கோயில், குமரக் கோட்டம் என தடுக்கி விழுந்தால் கோயில்கள் என தெருவிற்கு தெரு கோயில்களை கொண்டு ஆன்மிக நகரமாக இது விளங்கி வருகிறது.
பட்டுக்குப் புகழ் பெற்ற ஊர் என்றும் பெயர் பெற்றுள்ளதால் ஏராளமான துணிக் கடைகள் இங்கு உள்ளன. வரதராஜ பெருமாள் உற்சவம் தற்போது நடந்து வரும் நிலையில், உற்சவத்தின் போது வழக்கமாக அர்ச்சகர்களுக்கு இடையே நடைபெறும் வடகலை தென்கலை மோதலும் சமீபத்தில் அரங்கேறி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.
காஞ்சிபுரத்துக்கு தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து மக்கள் ஆலய தரிசனத்துக்கும், ஆடைகள் வாங்கவும் நாள்தோறும் ஆயிரக்கணக்கில் வந்து சென்ற வண்ணம் இருப்பர். சமீபகாலமாக காஞ்சிபுரத்தில் உணவகங்கள் பல்வேறு விதவிதமான சாப்பாடுகளுடன் செயல்பட்டு வருகின்றன.
காஞ்சிபுரம் இட்லி போன்ற தனித்தன்மை வாய்ந்த உணவு வகைகளும் இங்கு பிரபலமானது. இதனால் தங்கள் தனித்தன்மையை நிரூபிக்க உணவகங்கள் புதிது புதிதாக யோசிக்க வேண்டிய நிலையில் உள்ளன. இந்த நிலையில், காஞ்சிபுரம் மேற்கு ராஜவீதியில் கச்சபேஸ்வரர் கோவில் அருகே நண்பர்கள் சிலர் இணைந்து முருகன் கஃபே என்ற புதிய உணவகத்தைத் திறந்துள்ளனர்.
புது விதமாக வாடிக்கையாளர் கவனத்தை ஈர்க்க என்ன செய்யலாம் என யோசித்த போது அந்த உணவக உரிமையாளர்கள், தொடக்க நாள் சலுகையாக உணவகத்தின் திறப்பு நாள் அன்று 10 ரூபாய்க்கு டிபன் அளிக்கப்படும் என அதிரடியாக அறிவித்தனர். வெறும் பத்து ரூபாய்க்கு கேசரி,பூரி,பொங்கல்,இட்லி,தோசை என 5 வகையான உணவுகளுடன் காலைச் சிற்றுண்டி அளிக்கப்படுமென அறிவித்திருந்தனர்.
அலை மோதும்போதே தலை முழுகு என்ற பழமொழிக்கேற்ப உணவகம் திறக்கப்படும் நாளான இன்று(ஜூன் 11), கடை திறப்பதற்கு முன்னதாகவே ஏராளமான வாடிக்கையாளர்கள் கடைக்கு முன் குவிந்து, நீண்ட வரிசையில் காத்திருந்து 10 ரூபாய்க்கு உணவு வாங்கி உண்டு மகிழ்ந்தனர்.
ஆண், பெண், முதியோர், குழந்தைகள் என எந்த பேதமும் இன்றி வாடிக்கையாளர்கள் குவிந்தது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. உணவகத்திற்கு நல்ல விளம்பரம் கிடைத்த மகிழ்ச்சியில் உரிமையாளர்கள் மகிழ்ச்சியில் திகைத்துள்ளனர். அறிமுகச் சலுகையாக மட்டுமே அளிக்கப்பட்ட இந்த பத்து ரூபாய் சிற்றுண்டிக்கு நாளை முதல் 50 ரூபாயாக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: Actor Vijay: மாணவர்களை சந்திக்கும் நடிகர் விஜய்.. அடையாள அட்டை வழங்கும் பணி தீவிரம்!